/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுவர் விளம்பரம் செய்ய அனுமதி கிடையாது: கலெக்டர்
/
சுவர் விளம்பரம் செய்ய அனுமதி கிடையாது: கலெக்டர்
ADDED : மார் 19, 2024 03:39 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து, கலெக்டர் கலைச்செல்வி நிருபர்களிடம் தெரிவித்திருந்தார்.
கலெக்டர் கலைச்செல்வி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், 13.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1,417 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இதில், 179 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மொத்த வாக்காளர்களில், 85 வயதுக்கு மேல் 12,035 பேர் உள்ளனர். அதேபோல், 8,250 மாற்றுத்திறனாளிகளும், 1,704 பார்வையற்றோரும், 293 ராணுவ வீரர்களும் உள்ளனர்.
நகர்ப்புறங்களில் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி கிடையாது. கிராமப்புறங்களில், வீட்டு உரிமையாளர் அனுமதி பெற்ற பின் சுவர் விளம்பரம் செய்ய முடியும்.
மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படாது. கொடி மற்றும் அரசியல் கட்சிகளின் சின்னம் போன்றவை இருந்தால் அவை மறைக்கப்படும். தேர்தல் புறக்கணிப்பு செய்யும் முடிவில் இருப்போரிடம் பேசி சமாதானம் செய்யப்படும்.
பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள், 50,000 ரூபாய்க்கு மேல், ஆவணமின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
தேர்தல் விதிமுறைகள் பின்பற்ற வேண்டியவை குறித்து, அரசியல் கட்சியினருக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுவிதா எனும் மொபைல் ஆப் மூலமாக, தேர்தல் விதிமீறல் புகார்களை அளிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன், 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

