/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜி.ஹெச்.,சில் சுகப்பிரசவம் எண்ணிக்கை...அதிகரிப்பு!:4 ஆண்டில் 12,978 பிரசவம் பார்த்த டாக்டர்கள்
/
ஜி.ஹெச்.,சில் சுகப்பிரசவம் எண்ணிக்கை...அதிகரிப்பு!:4 ஆண்டில் 12,978 பிரசவம் பார்த்த டாக்டர்கள்
ஜி.ஹெச்.,சில் சுகப்பிரசவம் எண்ணிக்கை...அதிகரிப்பு!:4 ஆண்டில் 12,978 பிரசவம் பார்த்த டாக்டர்கள்
ஜி.ஹெச்.,சில் சுகப்பிரசவம் எண்ணிக்கை...அதிகரிப்பு!:4 ஆண்டில் 12,978 பிரசவம் பார்த்த டாக்டர்கள்
ADDED : ஜன 31, 2025 08:29 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சிசேரியனை காட்டிலும், சுகபிரசவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. நான்கு ஆண்டுகளில், 12,978 சுகபிரசவங்கள் நடந்த நிலையில், 9,082 சிசேரியன் பிரசவங்கள் நடந்திருப்பதாக மருத்துவமனை தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே ரோட்டில் இயங்கி வருகிறது. பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பிரசவத்திற்காகவே தினமும் பலர் இங்கு வருகின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தாய் - சேய் சிகிச்சையை இம்மருத்துவமனை வழங்குகிறது. பெண்களுக்கான நோய் கண்டறிதல், மகப்பேறு சிகிச்சை, பிரசவம் பார்ப்பது போன்றவை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுவதால், மகப்பேறு தொடர்பான மிக நீண்டகால அனுபவம் இங்குள்ளது.
இதனால், காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மட்டுமல்லாம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் என, காஞ்சிரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகின்றனர்.
பிரசவம் பார்க்கும் மகப்பேறு பிரிவில், சுக பிரசவத்தை காட்டிலும், சிசேரியன் பிரசவம் அதிகம் நடப்பதாக, மக்களிடம் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், அதை மறுக்கும் வகையில், அதிக எண்ணிக்கையில் சுக பிரசவம் நடந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. உதாரணமாக, 2021 முதல் 2024ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், 12,978 சுகபிரசவங்களும், 9,082 சிசேரியன் பிரசவங்களும் நடந்துள்ளன.
நான்கு ஆண்டுகளில், சிசேரியன் பிரசவத்தை காட்டிலும், 3,896 சுகபிரசவங்கள் அதிகமாக நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகபிரசவம் நடைபெற வாய்ப்பு குறையும்போது தான், சிசேரியன் செய்ய பரிந்துரைப்பதாகவும், கர்ப்பிணியின் உடல்நிலையை பொறுத்து தான் அதை முடிவு செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணியின் உடல்நிலையும், பிறக்க போகும் குழந்தைக்கு உயர் சிகிச்சை தேவைப்படும் நிலையில் தான், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வதாகவும், சிக்கலான பிரசவங்கள் பல கையாண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணியரிடம் கனிவற்ற பேச்சும், அவர்களை ஒருமையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தற்போது வரை உள்ளன. இருப்பினும், ஒரு நாளைக்கு சராசரியாக 25 பிரசவங்கள் நடக்கின்றன.
தாய் - சேய் மருத்துவ சிகிச்சையில், மத்திய அரசின் லக்க்ஷயா விருது, கடந்த 2020ல், இம்மருத்துவமனை பெற்றுள்ளது. அறுவை சிகிச்சை அரங்குகள் பராமரிப்பது, சுகாதார பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு, மத்திய குடும்பநல அமைச்சகம் இந்த விருதை வழங்குகிறது.
இம்மருத்துவமனை ஏற்கனவே இவ்விருது பெற்றிருப்பதால், கர்ப்பிணியர் பலருக்கு சிக்கலான பிரசவங்களை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மைய நோடல் அலுவலரான மருத்துவர் புவனேஸ்வரி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில், தலைமை மருத்துவர் கிருஷ்ணகுமாரி தலைமையின் கீழ், நாங்கள் எட்டு மருத்துவர்களும், 10 பயிற்சி பெற்ற செவிலியர்களும் பணியாற்றுகிறோம்.
சிசேரியனை காட்டிலும் சுக பிரசவம் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிறது. சிசேரியன் செய்வதற்கான சூழல் உருவாகும்போது தான் அதற்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
உதாரணமாக, குழந்தை பிறப்பு வழி குறுகலாக இருந்தாலோ, வயிற்றிலேயே குழந்தை மலம் கழித்து மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, பனிக்குடம் உடைந்து நீர் அளவு குறைந்துவிட்டாலோ, குழந்தை வயிற்றில் குறுக்காக இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்ய பரிந்துரை செய்கிறோம். சுக பிரசவம் நடக்கவே நாங்கள் பெரும்பாலும் முயற்சிக்கிறோம்.
அனைத்து வசதிகளும் இங்கு இருப்பதாலேயே, சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். ஒரு நாளைக்கு, 250 பெண்கள் மகப்பேறு தொடர்பான சிகிச்சைக்கு புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.
அதேபோல், கர்ப்ப கால ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு கூடுதல், ரத்தசோகை, தைராய்டு, நெகட்டிவ் ரத்த வகை கொண்டவர்கள், உயரம் குறைவானவர்கள் போன்ற வகைப்பாட்டில் உள்ள பெண்களுக்கு பிரசவம் சிக்கல் நிறைந்ததாக இருக்க கூடும்.
அவர்களுக்கும் பிரசவம் பார்த்து நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். வயிற்றில் இரு குழந்தைகள் இருந்தாலும், செங்கல்பட்டு, எழும்பூர் ஆகிய இடங்களுக்கு அனுப்புவதில்லை. இரட்டை குழந்தை பிறக்கும் பிரசவங்கள் மாதந்தோறும் இரண்டு பேருக்கு சாதாரணமாக நடக்கிறது.
ஓராண்டில், 60 பேருக்கும் குறைவாகவே மற்ற மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கிறோமே தவிர, 5,000க்கும் மேற்பட்ட பிரசவங்கள் இங்கேயே நடந்துள்ளன.
உதாரணமாக, கரு குழாய் வெடித்து உதிரப்போக்கு அதிகமான நிலையில், ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சரிசெய்தோம். அதேபோல், ரத்த கொதிப்பு மிக அதிகமானவர்களுக்கும், கர்ப்பப்பை இரண்டாக பிளவுபட்ட ஒருவருக்கும் நாங்கள் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்துள்ளோம்.
மருத்துவமனை மீதான குற்றச்சாட்டுகளை தவிர்த்து, இங்கு வழங்கப்படும் சிகிச்சைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.