/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி அரைகுறை ரூ.23 கோடி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியம்
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி அரைகுறை ரூ.23 கோடி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியம்
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி அரைகுறை ரூ.23 கோடி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியம்
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி அரைகுறை ரூ.23 கோடி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : அக் 27, 2025 12:43 AM

குன்றத்துார்: செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை, 23 கோடியில் பலப்படுத்தும் பணிகள் நிறைவடையாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. பருவமழை துவங்கி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையில் மண் அரிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழமும் உடையது. குன்றத்துார் அருகே இந்த ஏரிக்கரை, 8 கி.மீ., நீளத்திற்கு அமைந்துள்ளது.
பலவீனமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் பணி துவங்கியது.
கரையில் கைப்பிடி சுவர், அலை தடுப்பு சுவர், வெள்ள தடுப்பு சுவர், உட்புற கரை பாதுகாப்புக்கு கான்கிரீட் சுவர் என, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பரில் முடிக்க வேண்டிய இப்பணி, இதுவரை நிறைவடையவில்லை.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி, செம்பரம்பாக்கம் ஏரியில் நிரம்பியுள்ள 2.90 டி.எம்.சி., கொள்ளளவில் விநாடிக்கு 945 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர் வெளியேற்றப்படும் ஐந்து கண் மதகு வெளியே 100 மீட்டர் நீளம் வெள்ள தடுப்புச் சுவர் கட்டும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. அங்கு, கட்டுமான கம்பிகள் ஆபத்தான முறையில் நீட்டிக்கொண்டுள்ளன.
அதிகப்படியான நீர் திறக்கப்பட்டால், இப்பகுதியில் கரையோரம் மண் சரியும் ஆபத்து உள்ளது. தவிர, கைப்பிடி சுவர், மதகின் மீதுள்ள வழியை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அலை தடுப்புச் சுவர், கரை பாதுகாப்பு கான்கீரிட் சுவர் உள்ளிட்ட முக்கிய பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதனால், ஏரிக்கரை கூடுதல் பலமாகவே உள்ளது.
முடிவடையாத பணிகளால் கரைக்கு ஆபத்து இல்லை. 15 நாட்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தோம்; அதற்குள் பருவமழை துவங்கிவிட்டது. 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எஞ்சியவை பருவமழை நின்ற பின் துவக்கி, ஜனவரிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

