/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பாலம் சாலை பெயரளவிற்கு சீரமைப்பு
/
பழையசீவரம் பாலம் சாலை பெயரளவிற்கு சீரமைப்பு
ADDED : நவ 15, 2025 11:25 PM
வாலாஜாபாத்:பழையசீவரம் பாலாறு பாலத்தின் மீது சேதம் அடைந்த சாலை கண் துடைப்பாக பெயரளவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் உள்ளது. பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாறின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
திருமுக்கூடல் அடுத்த மதுார், சிறுதாமூர், சிறுமையிலுார், பழவேரி, பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இரவு, பகலாக இந்த பாலம் வழியாக இயங்குகிறது.
வாகனங்கள் அதிகரிப்பு மற்றும் அதிக பாரம் காரணமாக பாலத்தின் சாலை அடிக்கடி பழுதடைந்து அவ்வப்போது தற்காலிக சீரமைப்பு பணி செய்யப்படுகிறது. கடந்த மாதங்களில் பெய்த மழைக்கு இச்சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனிடையே, நெடுஞ்சாலைத் துறை சார்பில், கடந்த வாரம் பழையசீவரம் - திருமுக்கூடல் மேம்பாலம் சாலை பழுதான பகுதிகளில் சீரமைப்பு பணி நடந்தது.
ஆனால், பணி முறையாக மேற்கொள்ளாமல் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் மேலோட்டமாக தார் பூசப்பட்டுள்ளது. கண் துடைப்பாக பெயர் அளவிற்கு செய்த இப்பணியால் பயன் ஏதுமில்லை என அப்பகுதி வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
எனவே, பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்று பாலம் சாலையில், இருபுறம் குவிந்துள்ள மண்ணை முழுவதுமாக அகற்றி சாலை முழுக்க சீரமைப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

