/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
9 சுகாதாரத் துறை கட்டடங்கள் திறப்பு
/
9 சுகாதாரத் துறை கட்டடங்கள் திறப்பு
ADDED : ஏப் 13, 2025 01:58 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு மருத்துவமனை கட்டடங்களும், ஆய்வகம், குடியிருப்பு போன்ற கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருந்தன.
மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா, திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. அங்கு, திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1.20 கோடி ரூபாயில் புறநோயாளிகள் பிரிவும், 1 கோடி ரூபாய் மதிப்பில் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வகமும், நத்தப்பேட்டையில் 30 லட்சம் ரூபாயில் துணை சுகாதார நிலையமும் நேற்று திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தன.
மேலும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காக்கநல்லுார் துணை சுகாதார நிலைய கட்டடமும், 30 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள எம்.கண்டிகை துணை சுகாதார நிலைய கட்டடமும், 35 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள அன்னத்துார் துணை சுகாதார நிலைய கட்டடமும் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தன.
மேலும், 50 லட்சம் ரூபாயில் மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய அலகு கட்டடமும், 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட மானாம்பதி செவிலியர் குடியிருப்பு கட்டமும், 30 லட்சம் ரூபாயில் தண்டலம் துணை சுகாதார நிலைய கட்டடம் என, 4.8 கோடி ரூபாய் மதிப்பில், 9 கட்டடங்களை, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
இந்த கட்டடங்கள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையை, ஆராய்ச்சி மையமாக மாற்றும் பணிகள் செய்து வருகிறோம். இந்த மருத்துவமனையில், 290 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக இருந்தது. தரம் உயர்த்த 250 கோடி மதிப்பில் பணிகள் முதல்வர் உத்தரவின்படி, நடக்கின்றன. இப்பணிகள் மட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் என, 23 மருத்துவ கட்டட பணிகள் நடக்கின்றன.
இன்றைக்கு திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் மதிப்பீட்டையும் சேர்த்து, 300 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டட பணிகள் நடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பாம்பு கடி, நாய் கடி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள 5 டெக்னீஷியன் பணியிடங்களும் அடுத்த சில நாட்களில் நிரப்பி விடுவார்கள். காஞ்சிபுரம் மருத்துவமனை அனைத்து வசதிகளும் நிறைந்த மருத்துவமனையாக உள்ளது.
புற்றுநோய் துல்லியமாக கண்டறியும் கருவி மதுரை, சென்னை என இரண்டு இடங்களில் மட்டுமே இருந்தது. இப்போது, காஞ்சிபுரம் காரைப்பேட்டை உள்ளிட்ட 7 இடங்களில் உள்ளன. டிஜிட்டல் எக்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளிட்டவை படிப்படியாக கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

