/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
/
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : பிப் 19, 2025 12:57 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வடமங்கலம் ஊராட்சியில் என்.எஸ்.கே., சாலை, காந்தி தெரு, எம்.ஜி.ஆர்., தெரு உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, என்.எஸ்.கே., சாலையில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், மேல்நிலை குடிநீர் தொட்டியின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சேதமானது. அதேபோல், குடிநீர் தொட்டியின் இரும்பு ஏணியும் துருப்பிடித்து உடைந்தது. இதனால், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளாக குடிநீர் தொட்டியை உபயோகிக்க முடியாமல் உள்ளது.
அதே பகுதியில் உள்ள மற்றொரு குடிநீர் தொட்டியில் இருந்தும், மின் மோட்டாரில் இருந்து நேரடியாகவும் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டி, எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பகுதிவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எனவே, கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன், ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.