/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனி நபர்கள் துார்த்த பாசன கால்வாயால் சீட்டணஞ்சேரியில் கருகும் நெல், கத்தரி பயிர்கள்
/
தனி நபர்கள் துார்த்த பாசன கால்வாயால் சீட்டணஞ்சேரியில் கருகும் நெல், கத்தரி பயிர்கள்
தனி நபர்கள் துார்த்த பாசன கால்வாயால் சீட்டணஞ்சேரியில் கருகும் நெல், கத்தரி பயிர்கள்
தனி நபர்கள் துார்த்த பாசன கால்வாயால் சீட்டணஞ்சேரியில் கருகும் நெல், கத்தரி பயிர்கள்
UPDATED : ஆக 02, 2025 11:19 PM
ADDED : ஆக 02, 2025 11:17 PM

சீட்டணஞ்சேரி:சீட்டணஞ்சேரியில், தனி நபர்கள் துார்த்த பாசன கால்வாயால், நெல், கத்தரி பயிர்கள் கருகி வீணாகி வருகின்றன.
![]() |
உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி 42; இவர், மூன்று ஏக்கரில் நெல் பயிரிட்டு தற்போது அப்பயிர்கள் அடுத்த சில தினங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
இந்நிலையில், இவரது நிலத்திற்கு தண்ணீர் செல்லக்கூடிய பாசனக் கால்வாயை அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் இருவர், தன் நிலம் என அக்கால்வாயை துார்த்து அடைத்து விட்டதாக தெரிகிறது.
இதனால், பாசன வசதி இல்லாமல் மூன்று ஏக்கர் நெல் பயிர் கருகி வருவதால் விவசாயி பரிதவித்து வருகிறார்.
இதுகுறித்து, விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த நீர்ப்பாசன கால்வாயை ஒட்டி நிலம் வைத்துள்ள உரிமையாளர் இருவர் துார்த்து விட்டனர். இதனால், அடுத்த சில தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய மூன்று ஏக்கர் பரப்பிலான நெல் பயிர்கள் 10 நாட்களாக காய்ந்து வருகின்றன.
இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் பாய்ச்சவில்லை எனில் அப்பயிர்கள் கருகி வீணாகி விடும்.
மேலும், ஒரு ஏக்கர் பரப்பிலான கத்தரி செடியும் பாசனம் இல்லாமல் வாடி வதங்கி விட்டது.
தண்ணீர் வசதி இருந்தும் பாசனம் செய்ய முடியாமல் பயிர்கள் வாடுகின்றன.
இதுகுறித்து, சாலவாக்கம் போலீசில் புகார் அளித்தும், அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, பாசன கால்வாய் வழியாக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் கூறியதாவது:
சீட்டணஞ்சேரியில், காலீஸ்வரர் கோவில் நிலத்திற்கும், தனி நபரின் பட்டா நிலத்திற்கும் இடையே தாங்கலில் இருந்து, பாசன கால்வாய் விவசாய நிலத்திற்கு செல்கிறது.
அக்கால்வாய் கிராம வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. கிராம கணக்கு புலப்படத்தில் இல்லை.
இந்த பாசன கால்வாய் சிலரால் மூடப்பட்டுள்ளதால் மற்ற விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நெற்பயிர்கள் குறித்து ஆய்வு செய்து வருவாய் துறை மேல்மட்ட அதிகாரிகள் கவனத்திற்கு தெரிவித்துள்ளேன்,
இவ்வாறு அவர் கூறினார்.

