/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
/
கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
ADDED : மே 06, 2025 12:42 AM
அரும்புலியூர்,
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது பேரணக்காவூர் கிராமம். இக்கிராமத்தில், நவரை பருவத்திற்கு ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக அப்பகுதி விவசாயிகள் 250 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர்.
தற்போது, அப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, அதே பகுதியில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.
பேரணக்காவூர் சுற்றியுள்ள சித்தனக்காவூர், தண்டரை கிராம விவசாயிகளும், தங்களது நிலத்தில் வளைந்த நெல்லை இக்கொள்முதல் நிலையம் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வரும் நெல், உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனவும், கொள்முதல் செய்து மூட்டைகளில் பிடித்தம் செய்துள்ள நெல்லும் லாரிகள் வாயிலாக ஏற்றிச் செல்லாமல் தேங்கி உள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், இரு தினங்களாக மாலை நேரத்தில் சூறை காற்றுடன் லேசான மழை பொழிவு ஏற்பட்டது. அதிக மழை பெய்தால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் நனைந்து அரசுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், கொள்முதல் செய்யாமல் குவித்து வைத்துள்ள நெல்லும் சேதமாகும் நிலை உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, இக்கொள்முதல் நிலையத்தில் தேக்கமான நெல் மூட்டைகளை உடனடியாக நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.