/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேமிப்பு கிடங்கில் இடவசதி இல்லாததால் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் நெல்மணிகள்
/
சேமிப்பு கிடங்கில் இடவசதி இல்லாததால் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் நெல்மணிகள்
சேமிப்பு கிடங்கில் இடவசதி இல்லாததால் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் நெல்மணிகள்
சேமிப்பு கிடங்கில் இடவசதி இல்லாததால் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் நெல்மணிகள்
ADDED : ஜூன் 05, 2025 02:05 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், நாவலுார், கொளத்துார், வெங்காடு, இரும்பேடு, மலைப்பட்டு, உள்ளிட்ட கிராமங்களில், 8,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது..
தற்போது, நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிரை, 20 நாட்களுக்கு முன் அறுவடை செய்த விவசாயிகள், நாவலுாரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றனர்.
வீணாகும் நிலை
இந்த நிலையில், கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல் மணிகள், 20 நாட்களுக்கு மேலாக, கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.
இதனால், திடீரென மழை பெய்யும்போது, நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளன.
மேலும், கொள்முதல் நிலையத்தில், மாடு, பன்றிகள் அதிகமாக சுற்றி திரிவதால், நெல்மணிகளை பாதுகாக்க விவசாயிகள் மிகவும் சிரமடைந்து வருகின்றனர்.
மேலும், கொள்முதல் நிலையத்தில், நெல்மணிகள் தேக்கம் அடைந்துள்ளதால், மற்ற விவசாயிகள் அறுவடை செய்வதை தாமதப் படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:
அறுவடை செய்த நெல், நீண்ட நாட்களாக, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதால், அறுவடை கூலி, நிலம் குத்தகை பணம் செலுத்த முடியவில்லை.
மேலும், மழை மற்றும் கால்நடைகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை பாதுகாப்பது, மிகவும் சவாலாக உள்ளது.
எனவே, கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்லை, மூட்டையில் பிடித்து, சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் போதிய இடவசதி இல்லாததால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளில் பிடித்து வைக்க வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில், விவசாயிகளிடமிருந்து, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, காலியாக உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு, நெல் மூட்டைகள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.