PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM
கரும்பாக்கம்:நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, கரும்பாக்கம் மற்றும் களியப்பேட்டையில் தேக்கமாகி இருந்த நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம் மற்றும் களியப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் நெல் சாகுபடி பிரதான விவசாயமாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில் சொர்ணவாரி பட்டத்திற்கு நெல் பயிரிட்ட விவசாயிகள், ஒரு மாதமாக அறுவடை பணிகளை மேற்கொண்டு, அப்பகுதி கொள்முதல் நிலையங்களில் நெல்லை குவித்து வைத்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 26ம் தேதி, கரும்பாக்கம் மற்றும் களியப்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. எனினும், நெல் கொள்முதல் செய்யும் பணி துவங்கப் படாமல் இருந்தது.
இதனால், குவித்து வைத்திருந்த நெல்லை மழையில் நனையாமல் பாதுகாக்க விவசாயிகள் இரவும், பகலும் சிரமப்பட்டனர்.
இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 3ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று முன்தினம் களியப்பேட்டையிலும், நேற்று கரும்பாக்கத்திலும் நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.