/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறை வசதியுடன் பயணியர் நிழற்குடை
/
கழிப்பறை வசதியுடன் பயணியர் நிழற்குடை
ADDED : செப் 08, 2025 12:34 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், புதிய நிழற்குடை கட்டமைப்பில் கூடுதலாக கழிப்பறை வசதி கட்டப்பட்டு வருகிறது.
சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகின்றன.
ஏற்கனவே 21 அடி அகலம் உடைய இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 2022ல் துவங்கி 39 கி.மீ., துாரத்திற்கான சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய பாலங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகள் மேற்கொண்ட போது, சாலை விரிவாக்கம் செய்ய பேருந்து நிறுத்தங்களில், சாலையோரங்களில் இருந்த பயணியர் நிற்குடை கட்டடங்கள் அகற்றப்பட்டன.
தற்போது பணி நிறைவு பெற்ற இடங்களில், அகற்றப்பட்ட நிழற்குடை கட்டடங்களுக்கு மாறாக புதிய பயணியர் நிழற்குடை கட்டடங்கள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், பழையசீவரம் உள்ளிட்ட இடங்களில், அதிக அளவிலான பயணியர் வருகை தரும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை வசதியுடன்கூடிய நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.