/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதி வழியில் திரும்பும் இரவு நேர பேருந்துகளால்... அதிருப்தி ஊர் செல்ல முடியாமல் திக்குமுக்காடும் பயணியர்
/
பாதி வழியில் திரும்பும் இரவு நேர பேருந்துகளால்... அதிருப்தி ஊர் செல்ல முடியாமல் திக்குமுக்காடும் பயணியர்
பாதி வழியில் திரும்பும் இரவு நேர பேருந்துகளால்... அதிருப்தி ஊர் செல்ல முடியாமல் திக்குமுக்காடும் பயணியர்
பாதி வழியில் திரும்பும் இரவு நேர பேருந்துகளால்... அதிருப்தி ஊர் செல்ல முடியாமல் திக்குமுக்காடும் பயணியர்
ADDED : ஜூலை 21, 2025 11:35 PM

..
காஞ்சிபுரம் :காஞ்சிபுரத்தில் இருந்து, பூந்தமல்லி வரை இயக்க வேண்டிய இரவு நேர பேருந்துகள், சுங்குவார்சத்திரத்துடன் நிறுத்திக் கொள்வதால், பயணியர் ஊர் செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து ஓட்டுநர்கள், நடந்துநர்களின் அலட்சியப்போக்கால், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.
விழுப்புரம் கோட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களின் கீழ், 576க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன; பைபாஸ் சாலையில் செல்லும் விரைவு பேருந்துகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் சாதாரண பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு முதல், காஞ்சிபுரம் வரை; காஞ்சிபுரம் முதல், தாம்பரம் வரை; காஞ்சிபுரம் முதல், செங்கல்பட்டு வரை; காஞ்சிபுரம் முதல், வேலுார் வரை என, பல்வேறு வழித்தடங்களில் அரசு விரைவு மற்றும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், காஞ்சிபுரம் - பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்வோர், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் என, ஆயிரக்கணக்கான பயணியர் தினமும் பயணிக்கின்றனர்.
பகல் நேரங்களில் செல்லும் அரசு பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் செல்லும் பேருந்துகளை, சில ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இறுதி வரை இயக்காமல் பாதி வழியில் திரும்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் அரசு பேருந்துகள், சுங்குவார்சத்திரம் பகுதியில் பயணியரை பாதி வழியில் இறக்கிவிட்டு காஞ்சிபுரம் திரும்பி விடுவதாக பயணியர் இடையே புகார் எழுந்துள்ளது.
ஒரு பேருந்து ஓட்டுநர் செல்வதை பார்த்து, மற்றொரு பேருந்து ஓட்டுநர்களும் அதேபோல செல்கின்றனர். அடுத்தடுத்த பேருந்துகள் காஞ்சிபுரத்திற்கு திரும்பி செல்வதால், பயணியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார், கடம்பத்துார், திருவள்ளூர் செல்லும் அரசு அலுவலர்கள், போரூர் தனியார் மருத்துவமனைக்கு செல்வோர் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. மேலும், அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.
இது குறித்து, ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த பயணியர் சிலர் கூறியதாவது:
நான்கு நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் செல்லும் அரசு பேருந்து, இரவு 9:30 மணிக்கு புறப்பட்டது. இதில், அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வீடு திரும்புவோர், தண்டலம் மற்றும் போரூர் தனியார் மருத்துவமனைக்கு செல்வோர் என பல தரப்பினர் பேருந்தில் பயணித்தனர்.
பேருந்து புறப்பட்டு பாதி துாரம் சென்ற பின், சுங்குவார்சத்திரம் வரையில் தான் செல்லும் என நடத்துநர் டிக்கெட் கொடுக்கிறார். ஆனால், பேருந்து ஊர் பெயர் பலகையில் பூந்தமல்லி வரை போடப்பட்டிருந்தது.
பாதி வழியில் ஏன் பேருந்தை திருப்புகிறீர்கள் என நடத்துநரிடம் கேட்டதற்கு, பயணியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வேறு வழியின்றி சுங்குவார்சத்திரம் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பின், நள்ளிரவில் அதிக தொகை கொடுத்து ஆட்டோ பிடித்து ஸ்ரீபெரும்புதுார் செல்ல வேண்டி உள்ளது.
எங்களை போல பலர், தனியார் மருத்துவமனைக்கு செல்ல சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. மேலும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எங்கிருந்து எதுவரையில் செல்ல வேண்டும் என பேருந்து பெயர் பலகையில் போட்டுள்ளதோ அதுவரையில் பேருந்து இயக்கப்பட வேண்டும்.
பாதி வழியில் திரும்பும் பேருந்துகள் குறித்து, பொதுமக்கள் தயக்கமின்றி போக்குவரத்து துறையில் புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் - பூந்தமல்லி வரை இரவில் இயக்கப்படும் பேருந்துகள் இரவு நேரம் பேருந்து எண்ணிக்கை 7:00 -- 8:00 6 8:00- - 9:00 7 9:00- - 10:00 5 10:00- - 10:30 5