/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க படாளம் சர்க்கரை ஆலை நடவடிக்கை
/
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க படாளம் சர்க்கரை ஆலை நடவடிக்கை
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க படாளம் சர்க்கரை ஆலை நடவடிக்கை
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க படாளம் சர்க்கரை ஆலை நடவடிக்கை
ADDED : ஏப் 10, 2025 01:05 AM

சீட்டணஞ்சேரி:படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், சீட்டணஞ்சேரி மண்டல கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
சீட்டணஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் இதில் பங்கேற்றனர். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் காமாட்சி கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சர்க்கரைத் துறையின் சிறப்பு திட்டங்கள் குறித்தும், கரும்பு விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நடப்பாண்டில், சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு, மாநில அரசு வாயிலாக வழங்கப்படும் ஊக்கத்தொகை 349 ரூபாயுடன் சேர்த்து, 1,000 கிலோ கரும்புக்கு, 3,500 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
மேலும், அடுத்த ஆண்டில், 1,000 கிலோ கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், அதிக அளவிலான நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதை தொடர்ந்து பேசிய, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் ஜெகதீசன், 'கரும்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து' எடுத்துரைத்தார்.
கரும்பில் அதிகமான மகசூல் எடுக்க தேவையான யுக்திகள், கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் கரும்பு விவசாயத்தில் கடைபிடிக்க வேண்டிய நேர்த்திகள் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவரும், அப்பகுதி கரும்பு விவசாயியுமான தனபால் பேசினார். சீட்டணஞ்சேரி கரும்பு கோட்டத்தில் சமீப காலமாக கரும்பு சாகுபடி குறைந்து வரும் காரணங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
வெட்டுக்கூலி அதிகரிப்பு, காட்டுப் பன்றிகள் தொந்தரவு மற்றும் கட்டுப்படியாகாத கரும்பு விலை போன்றவை குறித்தும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி பேசினார்.
இவை குறித்து, ஆலை நிர்வாகம் வாயிலாக அரசு கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சீட்டணஞ்சேரி சுற்றுவட்டார பகுதி கரும்பு விவசாயிகள் ராமலிங்கம், கஜேந்திரன், முருகேஷ், மனோகரன், துரைவேல் உள்ளிட்டோர் கரும்பு விவசாயம் தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
அரசு மற்றும் ஆலை நிர்வாகம் மேற்கொள்ளும் உதவியின் பேரில் அடுத்தடுத்த பருவங்களில் கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதாக கூறினர்.
சீட்டணஞ்சேரி கோட்டம் கரும்பு அலுவலர் ஹாசன் நன்றி கூறினார்.