/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் கல் குவாரி அமைக்க பட்டா கிராமத்தினர் எதிர்ப்பு
/
தனியார் கல் குவாரி அமைக்க பட்டா கிராமத்தினர் எதிர்ப்பு
தனியார் கல் குவாரி அமைக்க பட்டா கிராமத்தினர் எதிர்ப்பு
தனியார் கல் குவாரி அமைக்க பட்டா கிராமத்தினர் எதிர்ப்பு
ADDED : நவ 08, 2024 09:39 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டா கிராமம். சிறுதாமூர் ஊராட்சியில் ஏற்கனவே தனியாருக்கு சொந்தமான நான்கு கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல் குவாரிகளில், வெடி வைக்கும் போது நில அதிர்வு, கனரக வாகனங்களால் சாலை சேதம், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக அப்பதிவாசிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பட்டா கிராமத்தில் தனியார் நிறுவனம் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி, புதிதாக ஒரு கல்குவாரி செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, முதற்கட்ட பணியாக பட்டா கிராம சாலையில் இருந்து குவாரி உள்ள இடத்திற்கு பாதை அமைக்கம் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டா கிராமவாசிகள் புதிய கல்குவாரிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சிறுதாமூர் ஊராட்சியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, கடந்தாண்டு புதிதாக மூன்று கல்குவாரிகள் செயல்பாட்டுக்கு வந்தது.
தற்போது, அந்த குவாரிகளின் இயக்கத்தால், தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். தற்போது, புதிய கல்குவாரி அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மண் பாதை அமைக்க காட்டு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதோடு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, மீண்டும் இப்பகுதியில் புதிய கல் குவாரி துவங்குவதற்கு தடை விதிப்பதோடு, கல் குவாரிக்காக அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.