/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெரு விளக்குகள் ஒளிராததால் வாலாஜாபாத் மக்கள் அவதி
/
தெரு விளக்குகள் ஒளிராததால் வாலாஜாபாத் மக்கள் அவதி
ADDED : மே 03, 2025 10:12 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில், மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள், சில நாட்களாக சரி, வர ஒளிராமல் உள்ளது.
மின் கம்பங்களில் பழுதடைந்த விளக்குகள் மாற்றாததால், இரவு நேரங்களில் குறிப்பிட்ட சில தெருக்களில் இருள் சூழ்ந்து உள்ளது.
குறிப்பாக, வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் ரயில்வே சாலையில் இருந்து, வெள்ளேரியம்மன் கோவில் வழியாக கிதிரிப்பேட்டை செல்லும் சாலை, மற்றும் போஜக்காரத் தெரு, சேர்க்காடு, தனலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதி தெருக்களில் மின் விளக்குகள் சரி,வர ஒளிராமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமம், திருட்டு பயம், விஷ ஜந்து நடமாட்டம் போன்ற பல்வேறு வகையிலான அச்சுறுத்தலால் குடியிருப்புவாசிகள் அவதிபட்டு வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில் மின் விளக்கு முறையாக பராமரித்து, அனைத்து மின் கம்பங்களிலும் தெரு விளக்குகள் ஒளிர செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில் பழுதான மின் விளக்குகளுக்கு மாற்றாக எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக 900 லைட்டுகள் வாங்கி வரப்பட்டு தற்போது கையிருப்பு உள்ளது.
ஒப்பந்ததாரர் வாயிலாக மின்விளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு சில நாட்களில் அனைத்து மின் கம்பங்களிலும் மின் விளக்குகள் ஒளிரும்,
இவ்வாறு அவர் கூறினார்.