ADDED : மார் 06, 2026 05:53 AM

உத்திரமேரூர்: பேரணக்காவூரில் இருந்து, சாலவாக்கம் செல்லும் பிரதான சாலை கனரக வாகனங்களால் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து, சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், காவணிப்பாக்கம் காப்புக்காடு அருகே, பேரணக்காவூர் செல்லும் 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.
பேரணக்காவூர் கிராம மக்கள் இந்த சாலை வழியாக சாலவாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்டபகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பேரணக்காவூரில் இயங்கும் தனியார் கல்குவாரியில் இருந்து, இச்சாலை வழியாக இரவு, பகலாக செல்லும் கனரக லாரிகளால் சாலை மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மேலும், இச்சாலையில் மின்வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பேரணக்காவூரில் இருந்து சாலவாக்கம் செல்லும் பிரதான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
