கழிவுநீரை சுத்திகரித்து வேகவதி ஆற்றில்விட மாநகராட்சி திட்டம்! மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறையில் அனுமதி கேட்பு
கழிவுநீரை சுத்திகரித்து வேகவதி ஆற்றில்விட மாநகராட்சி திட்டம்! மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறையில் அனுமதி கேட்பு
UPDATED : ஆக 20, 2026 10:12 PM
ADDED : ஆக 20, 2026 07:52 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் சேகரமாகும் கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து, தினமும், 3.60 கோடி லிட்டரை, வேகவதி ஆற்றில் திறந்துவிட, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீர் வளத்துறையிடம், மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதற்காக நத்தப்பேட்டை பகுதியில், 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில், 40 வார்டுகளில், 1975ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் என, 21,000 பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, திருக்காலிமேடு, கலெக்டர் அலுவலகம் சுற்றிய பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, மேலும் 15,000 இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் நகரில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து, நத்தப்பேட்டை ஏரியில் விடுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
தற்போது அந்த நிலையம் பழுதடைந்துள்ளதால், கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல், நத்தப்பேட்டை ஏரியில் கலப்பதாக புகார் உள்ளது.
இதனால் ஏரி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும், நத்தப்பேட்டை பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
நவீன தொழில்நுட்பம்
இதையடுத்து, பழைய நிலையத்திற்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பத்தில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
செவிலிமேடு, நத்தப்பேட்டை, ஓரிக்கை, திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குவதற்காக, உலக வங்கி உதவியுடன் 300 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனுடன், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நத்தப்பேட்டை பகுதியில் புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. குறைந்த பரப்பளவில் அதிக திறனுடன் செயல்படும் வகையில், 'சீக்குவல் பேட்ஜ் ரியாக்டர்' எனும், எஸ்.பி.ஆர்., தொழில்நுட்பம் வாயிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட உள்ளது.
கழிவுநீரை சுத்திகரிக்கும் ஒரு மேம்பட்ட உயிரியல் சுத்திகரிப்பு முறையாகும். இதில் ஒரே தொட்டியில் கழிவுநீர் சேகரிப்பு, காற்றேற்றம், சுத்திகரிப்பு மற்றும் தெளிந்த நீர் வெளியேற்றம் ஆகிய அனைத்து செயல்முறைகளும் வரிசையாக நடைபெறுகின்றன. குறைவான இடத்தில் இந்த கழிவுநீர் நிலையத்தை கட்டமைக்க முடியும். வெளியேறும் நீரின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். தனித்தனி தொட்டிகள் தேவையில்லை. எப்போதும் மின்சார பயன்பாடு இருக்க வேண்டும்.
இந்த நவீன தொழில்நுட்ப முறை சென்னை, தாம்பரம் போன்ற மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே செயல்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 1.20 கோடி லிட்டர் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வந்தது. புதிய நிலையம் மூலம், தினமும் 3.60 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஆற்றில்விட முடிவு
சுத்திகரிக்கப்பட்ட பின் வெளியேறும் நீரை தொழிற்சாலைகளுக்கும், தேவைக்கேற்ப விவசாயத்திற்கும் பயன்படுத்தும் அளவுக்கு தரம் மேம்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் நத்தப்பேட்டை ஏரியில் விடப்பட்டு வந்த நிலையில், புதிய சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சுத்திகரிக்கப்பட்ட நீரை, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., துாரம் குழாய் மூலம் கொண்டு சென்று வேகவதி ஆற்றில் திறந்துவிட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீர்வளத்துறையிடம் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. பல்வேறு தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒப்பந்தம் பெறும் நிறுவனமே, சுத்திகரிப்பு நிலையத்தை ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இந்த திட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. ஆற்றில் விடும் தண்ணீர் மிக துாய்மையானதாக இருக்கும். இது தொடர்பாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பிற துறைகளிடம் அிளக்கியுள்ளோம்' என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்பிருந்த சுத்திகரிப்பு நிலையம் குறைவான கொள்ளளவு கொண்டது. இப்போது பெரிய அளவிலான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருப்பதால், அதிக கொள்ளளவு கொண்டதாக உள்ளது.
அவற்றை தேங்கியள்ள ஏரி நீரில் கலப்பதை காட்டிலும், ஓடும் ஆற்றில் திறந்துவிட கேட்கின்றனர். இந்த திட்டத்திற்கான சாதக, பாதக விஷயங்களை ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
