/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் விமான நிலையத்திற்கு திட்ட அனுமதி கிடைத்தது
/
பரந்துார் விமான நிலையத்திற்கு திட்ட அனுமதி கிடைத்தது
பரந்துார் விமான நிலையத்திற்கு திட்ட அனுமதி கிடைத்தது
பரந்துார் விமான நிலையத்திற்கு திட்ட அனுமதி கிடைத்தது
ADDED : ஏப் 08, 2025 12:58 AM
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலையத்திற்கு, திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை, 'டிட்கோ'வுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று வழங்கியது.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் பயணியர் மற்றும் சரக்குகளை கையாள, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.
திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய். இதை தமிழக அரசின், 'டிட்கோ' எனும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், கூட்டு நிறுவனம் வாயிலாக அமைக்க உள்ளது.
பரந்துார் விமான நிலைய இட தேர்வுக்கு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், 2023ல் டிட்கோ விண்ணப்பித்தது.
இதற்கு, கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது.
தொடர்ந்து, பரந்துார் விமான நிலையத்திற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,300 ஏக்கரில், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியில் தற்போது, வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இட அனுமதி கிடைத்த நிலையில், திட்ட அனுமதி கேட்டு, 2024ல், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதை பரிசீலித்த ஆணையம், திட்ட அனுமதிக்கான கொள்ளை அளவிலான ஒப்புதலை நேற்று வழங்கியுள்ளது.
ஒரு விமான நிலையம் அமைப்பதற்கு, இட அனுமதி, திட்ட கொள்கை அளவிலான ஒப்புதல் மற்றும் கட்டுமானம் முடிந்த பின் இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கான அனுமதி என, மூன்று வகை அனுமதியை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெற வேண்டும்.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு இட அனுமதி ஏற்கனவே கிடைத்த நிலையில், தற்போது, திட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது.
எனவே, விமான நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை, 'டிட்கோ' விரைவில் துவக்க உள்ளது.
பரந்துார் விமான நிலையத்தின் முதல் கட்ட கட்டுமான பணிகளை, 2026ம் ஆண்டு, ஜனவரியில் துவக்கி, 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.