ADDED : மார் 01, 2024 11:32 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 54 தேர்வு மையங்களில் பிளஸ் 2 வகுப்பிற்கான தமிழ் பாடத்திற்கான தேர்வு நேற்று நடந்தது.
முதல் நாள் பொதுத்தேர்வு என்பதால், தேர்வு எவ்வாறு எழுத வேண்டும். மாணவ - மாணவியர் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தில் உள்ள54 தேர்வு மையங்களிலும், முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.
இந்த தேர்வு மையங்களுக்கு, 54 முதன்மை காப்பாளர்கள், 54 துறை அலுவலர்கள், ஐந்து கூடுதல்துறை அலுவலர்கள், 12 வழித்தட அலுவலர்கள், 100 பறக்கும் படை அலுவலர்கள், 800 அறை கண்காணிப்பாளர்கள், 145 நபர் சொல்வதை தேர்வு எழுதுவோர் என, 1,170 பேர் பிளஸ் 2 தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் கலைச்செல்வி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர், பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியர் அறைக்கு சென்று பார்வையிட்டனர்.
மொபைல்போனுக்கு தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 54 தேர்வு மையங்களில், அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதில், 'பள்ளித் தேர்வர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் யாரும் தங்களுடன் மொபைல்போனை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது.
'ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால், அவரது தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படும். மேலும், அடுத்து இரு பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்க இயலாது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
100 மதிப்பெண் பெறுவேன்
தமிழ்பாடத் தேர்வில், 6 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தது. பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டு இருந்த பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ர.சந்தியா
பிளஸ் 2 மாணவி,பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
சின்ன காஞ்சிபுரம்.
மனப்பாட பகுதி கடினம்
நான்கு மதிப்பெண் வினாக்கள் மற்றும் மனப்பாடப் பகுதி வினாக்கள் அனைத்தும் மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக, நான்கு மதிப்பெண் பகுதியில் புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தமிழ் பாடத்தில், 80 மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
மோ.தினேஷ்,
பிளஸ் 2 மாணவர்,
அந்திரசன் மேல்நிலைப்பள்ளி,
பெரிய காஞ்சிபுரம்.
ஒரு மதிப்பெண் வினா எளிது
தமிழ் பாடத்தில் 1 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருக்கும் என கூறினர். ஆனால், எளிமையாக இருந்தன. ஏற்கனவே, காலாண்டு, அரையாண்டு தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களே இடம் பெற்றன. 90க்கு மேல் மதிப்பெண் பெறுவேன்.
எஸ்.தாமரைச்செல்வி,
பிளஸ் 2 மாணவி, பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்ன காஞ்சிபுரம்.
இலக்கண வினாக்கள் கடினம்
எங்கள் பள்ளியில் அரசு தேர்வுக்கு என, முக்கிய வினாக்கள் வழங்கி இருந்தனர். அதிலிருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து உள்ளேன். இலக்கண பாட வினாமட்டும் சற்று கடினமாக இருந்தது. 80 மதிப்பெண் பெறுவேன்.
ஜி.நாகராஜ்,
பிளஸ் 2 மாணவர்,
கா.மு.சு., மேல்நிலைப்பள்ளி,
பெரிய காஞ்சிபுரம்.

