/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய பொன்னேரி ஏரிக்கரை
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய பொன்னேரி ஏரிக்கரை
ADDED : டிச 09, 2025 06:39 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் ஒட்டியுள்ள பொன்னேரி ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதி நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.
காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகில் பொன்னேரி ஏரி அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரி நீரை பயன்படுத்தி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய பணி நடந்தது.
ஏரியை சுற்றியுள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறியதால், பொன்னேரி ஏரி நீர் விவசாயத்திற்கு பயன்படாமல் உள்ளது. இருப்பினும், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
பொன்னேரி ஏரியை முறையாக பராமரிக்காததால், ஏரியில் கடற்பாலை, வெங்காய தாமரை செடிகளும் வளர்ந்துள்ளதால், ஏரி நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், புதிய ரயில்வே மேம்பாலத்தை ஒட்டியுள்ள பொன்னேரி ஏரிக்கரை பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
உணவகங்களில் மீதமான உணவு, இறைச்சி, மருத்துவமனை கழிவு, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் இரவு நேரத்தில் ஏரிக்கரையில் கொட்டப் படுகிறது.
இதனால், பொன்னேரி ஏரி நீர் மட்டுமின்றி, ஏரியை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.
எனவே, பொன்னேரி ஏரியில் குப்பை கொட்ட மாவட்ட நிர்வாகம் தடைவிதிப்பதோடு, தடையை மீறி குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

