வீட்டிலிருந்தே தபால் ஓட்டளிக்கும் வசதி விண்ணப்ப வினியோகம் துவக்கம்
வீட்டிலிருந்தே தபால் ஓட்டளிக்கும் வசதி விண்ணப்ப வினியோகம் துவக்கம்
ADDED : மார் 19, 2026 06:01 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் என, 15,880 பேர் வீட்டிலிருந்தே ஓட்டளிக்கும் வகையில், அவர்களுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டளிக்க முடியாத, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தங்களது ஓட்டுகளை வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் ஓட்டளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு செலுத்துவதற்கான விருப்பத்தைக் கோரும் விண்ணப்பப் படிவம்12-டி, வாக்காளர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. 85 வயதுக்கு மேற்பட்டோர் 6,864 பேரும், 9,016 பேர் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த விண்ணப்பங்கள் வழங்குகின்றனர்.
அவ்வாறு விண்ணப்பங்கள் வழங்கும்போது, வீட்டிலிருந்து ஓட்டளிக்க விருப்பமா அல்லது ஓட்டுச்சாவடி சென்று ஓட்டளிக்க விருப்பமா என தெரிவிக்க வேண்டும்.
வாக்காளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின், வீட்டிற்கே சென்று ஓட்டுப்பதிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
