/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி மேம்பாடு பட்டியல் தயாரிப்பில்...இழுத்தடிப்பு!:ஒத்துழைக்காத பல்துறை அதிகாரிகள்
/
ஊராட்சி மேம்பாடு பட்டியல் தயாரிப்பில்...இழுத்தடிப்பு!:ஒத்துழைக்காத பல்துறை அதிகாரிகள்
ஊராட்சி மேம்பாடு பட்டியல் தயாரிப்பில்...இழுத்தடிப்பு!:ஒத்துழைக்காத பல்துறை அதிகாரிகள்
ஊராட்சி மேம்பாடு பட்டியல் தயாரிப்பில்...இழுத்தடிப்பு!:ஒத்துழைக்காத பல்துறை அதிகாரிகள்
ADDED : மே 11, 2024 09:28 PM
காஞ்சிபுரம்:மாவட்டத்தில், பிற துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், ஊராட்சி மேம்பாடு திட்ட பட்டியலை தயாரிப்பதில் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர். சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளோம் என, அதிகாரிகள் மழுப்பலான பதிலை அளித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிகளில், வருவாய், பொது சுகாதாரம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை, நுகர்வோர் பாதுகாப்பு, அங்கன்வாடி மையம், காவல் உள்ளிட்ட 18 துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பயனாளிகளின் விபரம்
ஒவ்வொரு துறையில் இருக்கும் திட்ட விபரங்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை விபரங்களை சேகரிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 1ம் தேதி அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். ஆனால், அதை கடந்து 1 மாதமாகியும் இன்னமும், ஊராட்சிகளிடமிருந்து முழுமையான பதில் தகவல் கிடைக்கவில்லை.
இந்த விபரங்களை பெறுவதற்கு, பல்வேறு துறை அதிகாரிகளை, ஊராட்சி நிர்வாகத்தினர் தொடர்புக் கொள்ளும் போது, அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
உதாரணமாக, பொது சுகாதாரத் துறையில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட 52 விதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு, சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவர்கள் பதில் அளிக்க வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
அதேபோல, மீன் வளத்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மீனவர்கள் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்டுள்ளது. இந்த துறை உயரதிகாரிகளை எங்கு சென்று தேடி அலைவது என, தெரியவில்லை என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதுதவிர, கால்நடைதுறை உதவி மையம், தடுப்பூசி விபரம் ஆகிய, 35 விதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் அளிக்க அதிகாரிகள் இடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல, பிற துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு, பதில் கிடைக்கவில்லை என, ஊராட்சி நிர்வாகிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சிலர் கூறியதாவது:
தட்டிக் கழிக்கின்றனர்
ஊராட்சிகளில் குடிநீர் பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட நிர்வாக பணிகள் செய்வதற்கே சரியாக உள்ளது. துறை ரீதியாக நடக்கும் கூட்ட நிகழ்வுகள் மற்றும் அறிக்கை சமர்ப்பிக்க சரியாக உள்ளது.
தற்போது, ஊராட்சி மேம்பாடுகளில் கூடுதல் தகவல் பெற வேண்டும். ஒரு சில துறையினர், உயரதிகாரிகளிடம் கூறி தகவல்களை பெற்று தருகிறோம் என, நழுவி விடுகின்றனர்.
ஒரு சிலர், நாங்கள் ஏன் அளிக்க வேண்டும். எங்கள் துறை உயரதிகாரிகளை தொடர்புக் கொள்ளுங்கள் என, தட்டிக் கழிக்கின்றனர். இதுபோல, இருந்தால் நாங்கள் என்ன செய்வது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிற துறை அதிகாரிகளிடம் இருந்து, சேகரிக்க வேண்டிய விபரங்களை, அந்தந்த ஊராட்சி செயலர்களிடம் வழங்கி உள்ளோம்.
இதுதவிர, முறையாக அந்தந்த துறை உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளோம். தகவல் வழங்காத துறை அதிகாரிகளின் பதிலுக்கு பூஜ்ஜியம் பதிவிடப்படும். அதன் பின், முறையான விளக்கம் கேட்டு, விபரங்கள் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.