/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளை குரூப் 1 தேர்வு காஞ்சியில் ஏற்பாடுகள் தயார்
/
நாளை குரூப் 1 தேர்வு காஞ்சியில் ஏற்பாடுகள் தயார்
ADDED : ஜூன் 13, 2025 07:48 PM
காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வு, நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,238 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மாவட்டம் முழுதும் 17 மையங்களில், 25 ஹால்களில் நடக்க உள்ளது. தேர்வை கண்காணிக்க, 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், காலை 8:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு உடன் வர வேண்டும். காலை 9:00 மணிக்கு பின் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12:30 மணிக்கு முன் தேர்வறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு போன்ற ஆவணங்களின் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு, அரசு போக்குவரத்துக்கழகத்தின் வாயிலாக தேர்வு காலை 6:00 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல்போன் மற்றும் மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.