/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளில் சொத்து வரி வசூலிப்பது முடக்கம்: செயல்படாத இணையத்தால் சிக்கல்
/
ஊராட்சிகளில் சொத்து வரி வசூலிப்பது முடக்கம்: செயல்படாத இணையத்தால் சிக்கல்
ஊராட்சிகளில் சொத்து வரி வசூலிப்பது முடக்கம்: செயல்படாத இணையத்தால் சிக்கல்
ஊராட்சிகளில் சொத்து வரி வசூலிப்பது முடக்கம்: செயல்படாத இணையத்தால் சிக்கல்
ADDED : மே 30, 2025 10:25 PM
காஞ்சிபுரம்:ஊரக வளர்ச்சி துறையில், இணையதள தரவு மேம்பாட்டு பணி நடந்து வருவதால், ஆன்லைனில் வரி வசூலிக்கும் திட்டம் ஊராட்சிகளில் தற்காலிகமாக முடங்கியுள்ளது.
ஏற்கனவே கோடிக்கணக்கான வரியினங்கள் நிலுவையில் இருப்பதுடன், நடப்பு நிதி ஆண்டிற்கான வரி வசூலிப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஊராட்சிகளில் குடிநீர், தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வரியினங்களை குடியிருப்புவாசிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், அனைத்து விரியினங்களையும் https://sdp.nic.in/vptax/ என்ற இணையதளத்தின் வாயிலாக வசூலிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் துவங்கும் நிதி ஆண்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் பெரும்பாலான ஊராட்சிகளில் வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விதமான வரியினங்களை அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானத்தின் படி கட்டணங்களை வசூலிக்க வேண்டும்.
கடந்த 2023-- 24ம் நிதி ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும், 274 ஊராட்சிகளில் 9.16 கோடி ரூபாய் குடிநீர் வரியினங்களை வசூலிக்க வேண்டும்.
இதில், 1.95 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், 7.21 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
அதேபோல், தொழில் வரி, தொழில் உரிமம், வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிக்க 47.04 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில், 32.39 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதம், 14.65 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
இந்நிலையில் 2025-26 நடப்பு நிதி ஆண்டிற்கு வரி வசூலிக்கும் மாதம் துவங்கியும், ஆன்லைனில் போர்டல் எனப்படும் நுழைவாயில் கடந்த ஒரு மாதமாக ஓப்பன் ஆகவில்லை என, வரி செலுத்துவோர் மற்றும் ஊராட்சி தலைவர், செயலர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமில்லாது, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட தமிழகம் முழுதும் இதே நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊராட்சி வரியினங்கள் சாதாரணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆன்லைனில் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது. துவக்கத்தில், 50 சதவீத வரியினங்களை மட்டுமே வசூலிக்க முடிந்தது.
இந்த ஆண்டு நிலுவை தொகை மற்றும் கூடுதல் சதவீதத்தை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
தற்போது, மாநில ஊரக வளர்ச்சி துறையின் சர்வரில் கூடுதல் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதனால், ஆன்லைனில் வரி வசூலிப்பு செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.