ADDED : ஜன 06, 2026 05:39 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'உலகம் உங்கள் கையில் திட்டம்' துவக்க விழாவில், 233 மாணவ - மாணவியருக்கு லேப்டாப்களை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று வழங்கினார்.
அரசு கல்லுாரி மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ- - மாணவியருக்கு, லேப்டாப் வழங்க, தமிழக முதல்வர் உத்தரவை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு பொறியியல் கல்லுாரி,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ- - மாணவியர் 2,467 லேப்டாப்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில், கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவ - மாணவியருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கியதை தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், 'உலகம் உங்கள் கையில் திட்டம்' துவக்க விழா நேற்று மாலை நடந்தது.
இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்றார். கல்லுாரி இறுதியாண்டு பயிலும், 233 மாணவ - மாணவியருக்கு கைத்தறி அமைச்சர் காந்தி லேப்டாப்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், ஒன்றியக் குழு தலைவர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
