தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வேடந்தாங்கல் சரணாலயம் பற்றி அறிய க்யூ.ஆர்., கோடு குறியீடு வசதி

 வேடந்தாங்கல் சரணாலயம் பற்றி அறிய க்யூ.ஆர்., கோடு குறியீடு வசதி

 வேடந்தாங்கல் சரணாலயம் பற்றி அறிய க்யூ.ஆர்., கோடு குறியீடு வசதி


ADDED : நவ 29, 2025 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 04:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுழைவு கட்டணம் செலுத்த விரைவில் ஏற்பாடு

மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், பறவைகளை ரசிக்க வரும் சுற்றுலா பயணியர் வசதிக்கேற்ப நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுராந்தகம் அருகே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. சரணாலயம் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

ஏரியில் 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தற்போது இந்த ஏரியில், 12 அடிக்கு தண்ணீர் உள்ளது.

தற்போது வேடந்தாங்கல் சரணாலயத்தில் பர்மா, பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, கரண்டி வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையான, 25,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கியுள்ளன.

குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர் காலத்தில் பறவைகள் வரத்து துவங்குகிறது. டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரியில், பறவைகள் வரத்து அதிக அளவில் இருக்கும்.

மார்ச், ஏப்., மற்றும் மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை குறையும்.

அந்த வகையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து, பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது, ஒரு சில பறவை இனங்கள், வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் உள்ள மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து, அடைகாத்து வருகின்றன.

அதிகாலை 6:00 முதல் 8:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் 6:00 மணி வரையிலும், சரணாலயத்தில் இருந்து உணவு தேடி செல்லும் பறவைகள், மாலை நேரத்தில் கூடு நோக்கி திரும்புவதால், புகைப்படம் எடுக்கலாம் என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வேடந்தாங்கல் சரணாலயத்தில், பல்வேறு விதமான பறவைகள் வந்து தங்கும். அவற்றைப் பற்றி அறிய, அங்குள்ள இருக்கைகளில், பறவைகளின் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. அத்துடன், சரணாலய நுழைவாயில் முகப்பு பகுதியில், சிமென்ட் கல் பதித்து தரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வேடந்தாங்கல் சரணாலயம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், சரணாலயத்தின் நுழைவு பகுதியில், 'க்யூ.ஆர்., கோடு' வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த க்யூ.ஆர்., கோடை சுற்றுலா பயணியர் தங்களின் மொபைல் போன் மூலமாக 'ஸ்கேன்' செய்து, வேடந்தாங்கல் சரணாலயம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும், சரணாலயத்தின் நுழைவாயில் பகுதியில், ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

தற்போது, சுற்றுலா பயணியர் வசதிக்கேற்ப, சரணாலயத்தில் உள்ள அனைத்து குழாய்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், புதிதாக குழாய்கள் புதைக்கப்பட்டு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதுபோன்று, பல்வேறு வசதிகள் செய்து, வேடந்தாங்கல் சரணாலயத்தை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'கூகுள் பே'வில் கட்டணம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், மொபைல் போன் மற்றும் கேமராக்களுக்கு, தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், சில்லறை தட்டுப்பாடு நிலவி வருவதால், நீண்ட நாட்களாக சுற்றுலா பயணியர், மொபைல் போனில் கட்டணம் செலுத்தும் வகையில் 'கூகுள் பே' வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வனத்துறையின் மூலமாக இன்னும் சில நாட்களில், 'கூகுள் பே' மூலமாக கட்டணம் செலுத்தும் வகையில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.



பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத் தில் பிளாஸ்டிக் பொருட்களான குடிநீர் பாட்டில்கள், நெகிழி பைகள், நெகிழி பைகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் போன்றவற்றை கொண்டு செல்ல, முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பறவைகளின் நலனைக் காக்கவும், வனத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சுற்றுலா பயணியர் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்து பறிமுதல் செய்கின்றனர். சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சரணாலய பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us