/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராஜாஜி, நேரு மார்க்கெட் கட்டுமான பணிகள்...இழுத்தடிப்பு!: 2 ஆண்டாக தொடரும் மெத்தனத்தால் அவதி
/
ராஜாஜி, நேரு மார்க்கெட் கட்டுமான பணிகள்...இழுத்தடிப்பு!: 2 ஆண்டாக தொடரும் மெத்தனத்தால் அவதி
ராஜாஜி, நேரு மார்க்கெட் கட்டுமான பணிகள்...இழுத்தடிப்பு!: 2 ஆண்டாக தொடரும் மெத்தனத்தால் அவதி
ராஜாஜி, நேரு மார்க்கெட் கட்டுமான பணிகள்...இழுத்தடிப்பு!: 2 ஆண்டாக தொடரும் மெத்தனத்தால் அவதி
ADDED : ஆக 06, 2024 02:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள ராஜாஜி, நேரு என இரண்டு பிரதான மார்க்கெட் கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளாக இழுபறியாக நடப்பதால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மின் இணைப்பு, சுற்றுச்சுவர், கழிப்பறை போன்ற பணிகள் இன்னும் துவங்காததால், எப்போது பணி முடியும் என நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் என இரண்டு பிரதான மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இரு மார்க்கெட்டுகளிலும், ஆயிரக்கணக்கான மக்கள் காய்கறி, வாழை இல்லை, மளிகை பொருட்கள், பழங்கள், பூஜை பொருட்கள் போன்றவை வாங்கி வந்தனர்.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்திலேயே, இரு மார்க்கெட்டும் இயங்கி வந்ததால், போதிய அடிப்படை வசதியின்றி இருந்தது.
இதனால், காய்கறி, பழங்கள் வாங்க வரும் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமத்தை அளித்தது. மழைக்காலத்தில் மார்க்கெட் முழுதும் தண்ணீர் மிதந்து, சாக்கடை போல் காட்சியளிக்கும்.
இந்த இரண்டு மார்க்கெட்டுகளுக்கும் புதிய கட்டடம் தேவை என்பதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு மார்க்கெட்டுகளுக்கும் புதிய கட்டட பணிகளை துவக்கியது.
260 கடைகள்
ராஜாஜி மார்க்கெட்டுக்கு 7 கோடி ரூபாயும், நேரு மார்க்கெட்டுக்கு 4.6 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ராஜாஜி மார்க்கெட் பணி 2022 இறுதியில் துவங்கியது. நேரு மார்க்கெட் பணி 2023 மார்ச் மாதம் துவங்கியது.
ராஜாஜி மார்க்கெட்டில், 3 ஏக்கர் பரப்பளவில் 320 கடைகள் இருந்ததாகவும், மாநகராட்சி நிர்வாகம் இப்போது 260 கடைகளை கட்டி உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், கட்டுமான பணிகள் மெத்தனமாக நடப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஓரிக்கையில் இரண்டு ஆண்டுகளாக ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுவதால், 5 கி.மீ., துாரம் பயணித்து வர மக்கள் தயங்குவதால், வியாபாரம் பாதிப்பதாகவும், மார்க்கெட்டுக்கு வருவோர் விபத்தில் சிக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால், வியாபாரம் குறைந்து வாழ்வாதாரம் பாதிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
ஓராண்டில் முடிக்க திட்டமிட்ட ராஜாஜி மார்க்கெட் பணி, இரு ஆண்டுகளாக நடக்கிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு புதிய மார்க்கெட் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை மின்சார பணிகள், சுற்றுச்சுவர் பணிகள் கூட முடியாமல் இழுத்தடிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரத்திலிருந்து ஓரிக்கை வரை 5 கி.மீ., துாரம் பயணிப்பதில் சிரமம் இருப்பதால், விரைந்து மார்க்கெட்டை திறக்க வேண்டும் என நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல, செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் நேரு மார்க்கெட் கட்டுமான பணிகளும் மெத்தனமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இங்குள்ள வியாபாரிகள், செங்கழுநீரோடை வீதியில், சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
நேரு மார்க்கெட்டின் தரைதளத்தில், 76 கடைகள், கழிப்பறை, வாகன நிறுத்தம் போன்றவை கட்டப்படுகின்றன.
முதல் தளத்தை மாநகராட்சியின் வருமானத்தை அதிகப்படுத்த, வாடகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வியாபாரம் நடத்த சிரமம்
வங்கி, கடை போன்றவைக்கு வாடகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட் பணிகள் இழுத்தடிப்பதால், மின்சாரம், மின் விசிறி, மின் விளக்கு போன்றவை கூட இல்லாமல், தற்காலிக கடைகளில் வியாபாரம் நடத்த சிரமமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், நேரு மார்க்கெட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.
ராஜாஜி மார்க்கெட் பணிகளை விரைந்து முடித்து, திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தரிடம் மனு அளித்து உள்ளோம். மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது, எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மழைநீர் மார்க்கெட்டில் தேங்காதவாறு புதிய மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. ஓரிக்கையில் மார்க்கெட் செயல்படுவது வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் சிரமமாக உள்ளது. விரைவாக புதிய மார்கெட்டை திறக்க வேண்டும்.
-- ஜே.மோகன்,
தலைவர், ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம், காஞ்சிபுரம்.
நேரு மார்க்கெட் வியாபாரிகள், மின்சாரம்கூட இல்லாமல் தற்காலிக கடைகளில் சிரமப்படுகின்றனர். விரைவாக கட்டுமான பணிகளை முடித்து திறக்க வேண்டும். பார்க்கிங் பகுதிக்கு அதிக இடம் ஒதுக்கியதால், கடை வியாபாரிகளுக்கு 8க்கு 8 என, சிறிய அளவிலான கடையே கட்டப்பட்டுள்ளது. இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கழிப்பறை வசதியும் செய்யப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் விரைவாக பணிகளை முடித்து தர வேண்டும்.
- நிர்வாகி ஒருவர்,
ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், காஞ்சிபுரம்.
ஒரு சில மாதங்களில் இரு மார்க்கெட் பணிகளும் முடிந்துவிடும். ராஜாஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் கேட்டபடி, தனித்தனியாக ஒவ்வொரு கடைக்கும் இணைப்பு வழங்கப்படுகிறது. பணி முடிந்தவுடன், மார்க்கெட்டை முதல்வர் திறக்க உள்ளார். மாநகராட்சி வருவாய்க்காக, நேரு மார்க்கெட் முதல் தளத்தை வாடகை விட திட்டமிட்டுள்ளோம். ராஜாஜி மார்க்கெட் சுற்றுச்சுவர், கழிப்பறை போன்ற பணிகளுக்கு, 74 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. பணிகள் விரைவாக முடிந்துவிடும்.
- மகாலட்சுமி,
மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி.