/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளம் பெண் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
/
இளம் பெண் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
ADDED : செப் 11, 2025 10:02 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, காதல் விவகாரத்தில் இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அப்பெண்ணின் காதலனை கைது செய்ய கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரத்தை அடுத்து கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுஷ்யா, 21. இவரும், கண்ணன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கண்ணன், 21, என்பரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு சஞ்சய் கண்ணன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், சில நாட்களாக அனுஷ்யா உடன் பேசுவதை சஞ்சய் கண்ணன் நிறுத்தி உள்ளார். இதனால், மனமுடைந்த அனுஷ்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், அனுஷ்யாவின் தற்கொலைக்கு சஞ்சய் கண்ணன் தான் காரணம், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என கூறி, அனுஷ்யாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், எடையார்பாக்கம் -- கோட்டூர் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், எடையார்பாக்கம் -- கோட்டூர் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.