/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
448 தொகுப்பு வீடுகள் வாலாஜாபாதில் சீரமைப்பு
/
448 தொகுப்பு வீடுகள் வாலாஜாபாதில் சீரமைப்பு
ADDED : நவ 15, 2024 12:46 AM
வாலாஜாபாத்:குடிசை வீடுகளில் வசிப்போர் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு, மத்திய, மாநில அரசின் மானிய உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு கடந்த ஆண்டுகளில் கட்டிய தொகுப்பு வீடுகள், தற்போது பல இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ளன.
அவ்வாறு பழுதான வீடுகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன், ஊராட்சி அளவிலான தேர்வுக் குழு மற்றும் அதிகாரிகள் குழு வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சிறு அளவிலான சேதம் மற்றும் அதிக சேதம் என இருவேறு வகையான பட்டியல் தயாரித்து, அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 61 ஊராட்சிகளில், 448 பழைய தொகுப்பு வீடுகள் தேர்வு செய்யப்பட்டது.
வீடுகளின் சேதத்திற்கு ஏற்றவாறு நிதி மதிப்பீடு செய்யப்பட்டு, பயனாளிகளிடம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, பழுதான தொகுப்பு வீடுகளில், சுவர் விரிசல் சரி செய்தல், சீலிங் பூச்சு, தரை அமைத்தல், கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது பார்த்தல், வெள்ளை அடித்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பழுதான தொகுப்பு வீடுகளுக்கான சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் குழு கண்காணித்து,வருகின்றன. பராமரிப்பு மற்றும் பணி நிறைவு என, இரு தவணையாக நிதி விடுவிக்கப்படுகிறது.
தேவையான சிமென்ட் மற்றும் கம்பிகள் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.