/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் பழுதான சிக்னல் சீரமைப்பு
/
ஒரகடத்தில் பழுதான சிக்னல் சீரமைப்பு
ADDED : அக் 17, 2025 11:18 PM

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடத்தில் பழுதாகி செயல்படாமல் இருந்த சிக்னல் சீரமைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வண்டலுாரில் இருந்து வரும் வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் செல்ல, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் நிஷான் தொழிற்சாலை அருகே, 'யு- டர்ன்' எடுத்து சென்று வருகின்றன.
ஏராளமான வாகனங்கள் திரும்பும் அந்த திருப்பத்தில், சிக்னல் இல்லாததால் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் வாயிலாக, நிஷான் தொழிற்சாலை அருகே உள்ள திருப்பத்தில், சோலார் பேனலுடன் சிக்னல் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சில மாதங்களாக சிக்னல் பழுதடைந்து செயல்படாமல் போனது. இதனால், அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
பழுதான சிக்னலை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நிஷான் தொழிற்சாலை வாயிலாக பழுதடைந்த சிக்னல் விளக்குகளை அகற்றி, புது சிக்னல் அமைக்கப்பட்டது.