/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழைய ஓய்வூதியம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை
/
பழைய ஓய்வூதியம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 10:01 PM
காஞ்சிபுரம்,:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி, பள்ளி கல்வித் துறை, ஓய்வு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
கடந்த 2004ம் ஆண்டு முதல், அரசு ஊழியர்கள் ஆகிய நாங்கள் பணியில் சேர்ந்து, கடந்த ஜன., 31ல், நிறைய பேர் ஓய்வு பெற்றுள்ளோம். இன்னும் பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளோம்.
ஓய்வு பெற்ற பின் பழைய ஓய்வூதியம் எதுவும் இல்லாமல் நாங்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்வதற்கு வழிவகை ஏதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.
அரசு ஊழியர்கள் ஆகிய நாங்கள் ஒரு நல்ல நிலைமையில் இருந்து விட்டு, ஓய்வு பெற்ற பின் இரவு காவலர் பணிக்கும், 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்தும் மற்றும் கூலி வேலைக்குச் சென்றும் நாங்கள் எங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது.
இதில், 60 வயதிற்கு மேல் எங்களால் உடல் உழைப்பை நல்கிட முடியவில்லை. எனவே, தமிழக முதல்வர் கருணையோடு பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை போர்க்கால அடிப்படையில் வழங்க ஆவண செய்ய வேண்டும்.
தாங்கள் குழு அமைத்து ஒன்பது மாதங்களுக்குப் பின், எங்களுக்கு ஒரு நல்ல தகவலை சொல்வதாக கூறியுள்ளீர். இது ஓய்வு பெற்ற எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்த ஒன்பது மாதத்திற்குள் ஓய்வு பெற்ற நாங்கள் வாழ்வதற்கு வழிவகை ஏதுமில்லை. ஆதலால் இக்குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.