/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் அமைப்பு
/
சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் அமைப்பு
ADDED : ஜன 24, 2025 01:20 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் கீழ்கதிர்பூர் பிரதான சாலை வழியாக மேல்கதிர்பூர், மேட்டுக்குப்பம், மேல்ஒட்டிவாக்கம், கூத்திரமேடு, முசரவாக்கம், பாலுசெட்டிசத்திரம், தாமல் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், கீழ்கதிர்பூர் காலனி அருகே, சாலையோரத்தில் அடுத்தடுத்து இரு விவசாய கிணறுகள் திறந்தவெளியில் உள்ளன.
இரு கிணற்றுக்கும் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதேபோல, அப்பகுதி சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடும் போதும் கிணற்றில் தவறி விழும் நிலை உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், சாலையோரம் பாதுகாப்பின்றி உள்ள இரு கிணற்றுக்கும், சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சாலையோரம் உள்ள இரு விவசாய கிணற்றுக்கும், கிணற்றின் உரிமையாளர் வாயிலாக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

