sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆற்றில் 1,400 ஆக்கிரமிப்புகள்!: அரசியல் தலையீட்டால் 10 ஆண்டுகளாக தயக்கம்

/

வேகவதி ஆற்றில் 1,400 ஆக்கிரமிப்புகள்!: அரசியல் தலையீட்டால் 10 ஆண்டுகளாக தயக்கம்

வேகவதி ஆற்றில் 1,400 ஆக்கிரமிப்புகள்!: அரசியல் தலையீட்டால் 10 ஆண்டுகளாக தயக்கம்

வேகவதி ஆற்றில் 1,400 ஆக்கிரமிப்புகள்!: அரசியல் தலையீட்டால் 10 ஆண்டுகளாக தயக்கம்


UPDATED : மே 29, 2024 07:43 AM

ADDED : மே 28, 2024 11:48 PM

Google News

UPDATED : மே 29, 2024 07:43 AM ADDED : மே 28, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரை ஒட்டி பாயும், வேகவதி ஆற்றில் உள்ள 1,400 ஆக்கிரமிப்புகள், 10 ஆண்டுகளாக அகற்றப்படாமல், இழுபறி நீடிக்கிறது. அரசியல் தலையீட்டால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக, நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள், ஏக்கர் கணக்கில் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன.

அதில் முதன்மையானதாக, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் உள்ள, 1,400க்கும் மேற்பட்ட வீடுகள் அப்படியே உள்ளன.

வேகவதி தாமல் கிராமம் அருகே, பாலாற்றின் கிளை ஆறாக துவங்கி, தாங்கி கிராமத்தில் மீண்டும் பாலாற்றில் இணைகிறது. இதன் நீளம், 26 கி.மீ., சில இடங்களில் அகலமாகவும், சில இடங்களில் குறுகியும் வேகவதி ஆறு காணப்படுகிறது.

ஆக்கிரமிப்பு வீடுகள், ஆற்றுக்குள்ளேயே வீடுகள் கட்டியுள்ளதால், கால்வாய் போல காட்சிஅளிக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 2019ல் திறந்த பின்னும், அவை அப்படியே உள்ளன.

வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாததால், ஐந்து ஆண்டுகளாக அந்த கட்டடம் வீணாகி வருகிறது.

வேகவதி ஆற்றுக்குள்ளேயே, 1,000 வீடுகளுக்கு மேலாக கட்டப்பட்டுஉள்ளன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கட்டி தரப்பட்டும், அவர்களை காலி செய்ய வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதாக, நகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது அகற்றாததால், தி.மு.க., அரசு அமைந்த பின், இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆறு முழுமையாக மீட்டெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தி.மு.க., அரசு அமைந்து மூன்று ஆண்டுகளான நிலையில், இதுவரை அந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றாமலேயே உள்ளன. மேலும், 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, பலரும் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அந்த வீடுகளை அகற்ற மறுப்பது ஏன் என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தி.மு.க., ஆட்சி அமைந்த உடனே, சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், வேகவதி ஆக்கிரமிப்புகளை நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார். ஆனால், அதன்பின்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது பற்றி பேசுவதை, அவர் தவிர்த்து வருகிறார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், வேகவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்தாண்டு முதற்கட்டமாக 78 வீடுகளை, மாவட்ட நிர்வாகம் அகற்றியது. அதன்பின், மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எந்த நடவடிக்கையும் இன்றி, மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, நீர்வள ஆதாரத் துறையினர் அமைதியாக உள்ளனர்.

பருவமழை முடிந்து ஐந்து மாதங்களான நிலையில், அவற்றை அகற்றுவதாக தெரியவில்லை. ஆற்றில் இருக்கும் 1,400 வீடுகளை அகற்றுவதில் அரசியல் தலையீடு இருப்பதாலேயே, அதிகாரிகள் அகற்ற மறுப்பதாக நகரின் அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வேகவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு காரணம் காட்டி, ஒவ்வொரு முறையும் இந்த நடவடிக்கை தள்ளி போடுகின்றனர். இது சம்பந்தமாக பல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

எங்கள் தரப்பு கருத்துக்களையும், கலெக்டரிடம் ஏற்கனவே நாங்கள் கூறிஉள்ளோம். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாரானால், நாங்களும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுமா?


காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015ல் பெருமழையின்போது, வேகவதி ஆற்றுக்குள் வெள்ளம் புகுந்து, ஆக்கிரமிப்பு வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால், உடனடியாக காலி செய்ய நடவடிக்கை துவங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற, 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட நடவடிக்கை, இன்று வரை இழுபறியாகவே நீடித்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதால், நகரவாசிகளில் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us