/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
231 இடங்களில் சாலை பணிகள்... வேகம்! 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
/
231 இடங்களில் சாலை பணிகள்... வேகம்! 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
231 இடங்களில் சாலை பணிகள்... வேகம்! 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
231 இடங்களில் சாலை பணிகள்... வேகம்! 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
ADDED : பிப் 13, 2024 04:09 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 231 இடங்களில், 35.9 கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியிலான 22 கோடி ரூபாயில், 167 இடங்களில் சாலை அமைக்கப்படுகிறது. 6 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில், புறநகரில் கிராம ஊராட்சிகளாக செயல்படும், நகர்ப்புற வசதிகளை கொண்ட பகுதிகளை, 'பெரி அர்பன்' என, அழைக்கப்படுகிறது.
அவ்வாறு, நகர்ப்புற கட்டமைப்பு மற்றும் வசதிகளை கொண்ட ஊராட்சிகளில், வீடு கட்டுவதற்கான திட்டங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் பிற வகையான கட்டணங்களை, சி.எம்.டி.ஏ., உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் நகர ஊரமைப்பு இயக்கம் வசூலிக்கிறது.
இந்த அமைப்புகள் வசூலிக்கும் தொகையில் இருந்து, கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டு, வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று அமைப்புகளும் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை அமைக்க உள்ளன. இதற்கான பணிகளை, ஊரக வளர்ச்சி துறை மேற்கொள்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகள், குன்றத்துார், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்களிலும் உள்ளது.
இந்த மூன்று ஒன்றியங்களில் உள்ள 231 இடங்களில் கான்கிரீட் மற்றும் தார் சாலை அமைக்கப்படுகிறது.
சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக, 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, குன்றத்துார் ஒன்றியத்தில் 167 இடங்களில் சாலை அமைக்கப்படுகிறது. இதில், 164 இடங்களில் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாகவும், மூன்று இடத்தில் தார் சாலைகளும் அமைக்கப்படுகிறது.
அதேபோல, நகர ஊரமைப்பு இயக்கம் 8.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 26 இடங்களிலும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 16 இடங்களிலும், குன்றத்துார் ஒன்றியத்தில் 12 இடங்களிலும் சாலை அமைக்கப்படுகிறது.
உள்ளூர் திட்டக் குழுமம் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு 2.6 கோடி ரூபாய் மதிப்பில் 6 இடங்களிலும், 2.5 கோடி ரூபாய் மதிப்பில் 4 இடங்களிலும் சாலை அமைக்கிறது.
அதிகபட்சமாக, குன்றத்துார் ஒன்றியத்திற்கு அதிகபட்சமாக 22 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கின்றன. சென்னையை ஒட்டி இருப்பதாலும், சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில், குன்றத்துார் பகுதி இருப்பதாலும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த நிதியில் முழுக்க முழுக்க சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளுக்கும் டெண்டர் பணிகள் முடிந்து, சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
அதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆறு மாதங்களுக்குள் பணிகள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.