/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரியன்கேட் அருகே சாலை நடுவே தடுப்பு அமைப்பு
/
கரியன்கேட் அருகே சாலை நடுவே தடுப்பு அமைப்பு
ADDED : ஜூலை 14, 2025 11:50 PM

காஞ்சிபுரம்,கரியன்கேட் பகுதியில் சாலை நடுவே தடுப்பு அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கியுள்ளனர்.
அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே மின் ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், மின்சார ரயில்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, வட மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கரியன்கேட் ரயில் கடவுப்பாதை வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி ஆகிய மார்க்கம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.
திருப்பதி, திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து கரியன்கேட் வழியாக காஞ்சிபுரத்திற்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இரு மார்க்கங்களில் செல்லும் வாகனங்கள், கரியன்கேட் பகுதியை கடந்து செல்கின்றன. இதனால், ரயில்வே கேட் திறந்த பின், அதிவேகமாக முந்தி செல்லும் வாகனங்களால், கரியன்கேட் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை நடுவே பேரிகேட் என அழைக்கப்படும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக, வாகனங்கள் குறுக்கே புகுந்து செல்வது முற்றிலும் தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.