/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.3.47 கோடி முறைகேடு அம்பலம்!தில்லாலங்கடி மேலாளர் சஸ்பெண்ட்; சொத்துக்கள் முடக்கம்
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.3.47 கோடி முறைகேடு அம்பலம்!தில்லாலங்கடி மேலாளர் சஸ்பெண்ட்; சொத்துக்கள் முடக்கம்
மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.3.47 கோடி முறைகேடு அம்பலம்!தில்லாலங்கடி மேலாளர் சஸ்பெண்ட்; சொத்துக்கள் முடக்கம்
மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.3.47 கோடி முறைகேடு அம்பலம்!தில்லாலங்கடி மேலாளர் சஸ்பெண்ட்; சொத்துக்கள் முடக்கம்
UPDATED : டிச 16, 2025 11:37 AM
ADDED : டிச 16, 2025 06:01 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் கிளைகளில், 3.47 கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரம், வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி தணிக்கை பிரிவு மேலாளர் பவன்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதோடு, அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. போலீஸ் விசாரணையும் துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் சேக்குபேட்டை தெருவில், 100 ஆண்டுகளை கடந்து மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 52 கிளைகளில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய், வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி திட்டங்கள் வாயிலாக வழங்கி வருவதால், சிறந்த சேவைக்காக பல்வேறு விருதுகளை, தமிழக அரசிடம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி, வைப்புநிதி திட்டங்களுக்காக, காஞ்சிபுரம் மக்கள் இந்த வங்கியை நாடுகின்றனர்.
திணறல்
இந்நிலையில், இந்த வங்கியின் பல்வேறு கிளைகளில், லட்சக்கணக்கான ரூபாய் திடீரென வரவு வைப்பதும், அவற்றை பரிவர்த்தனை செய்வதும் நடந்துள்ளது. இதனால், வங்கி கிளை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு இதை தெரியபடுத்திய பின், வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அரசு வழங்கிய கடன் கணக்குகளில் உள்ள நிதியை, வங்கி தலைமை அலுவலகத்தில் செயல்பட்ட தணிக்கை பிரிவு மேலாளர் பவன்குமார், பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது.
வங்கியின் மேலாண்மை இயக்குநர் சிவமலர் மற்றும் வங்கி அதிகாரிகள் கடந்த மாதம், பவன்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வங்கி ஊழியர்களின், 'பாஸ்வேர்ட், ஐடி' போன்றவை பெற்று, 3.47 கோடி ரூபாயை, பல்வேறு வங்கி கிளைகளில் பரிவர்த்தனை செய்து முறைகேடு செய்தது தெரிய வந்தது. முறைகேடு செய்ததை தொடர்ந்து, அவரிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முறைகேடு செய்த, 3.47 கோடி ரூபாயில், 2 கோடி ரூபாய்க்கு மேலாக அவரின் சொத்துக்களை முடக்கி உள்ளனர். அவரிடம் இருந்து வசூலான பணம் தவிர, இன்னும் 60 லட்சம் ரூபாயை மட்டுமே பவன்குமார் வழங்க வேண்டும் என, வங்கி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மேலாண்மை இயக்குநர் சிவமலர், பவன்குமாரை, ஒரு வாரத்திற்கு முன், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். அவர் மீது, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகத்திடம் புகார் அளித்தார்.
விசாரணை நடத்த போலீசார் தயாரான நிலையில், பவன்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பவன்குமார் தலைமறைவானதால், மீதமுள்ள தொகையை எப்படி வசூலிப்பது என, வங்கி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
புகார்
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் யோகவிஷ்ணு கூறுகையில், ''மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து அறிக்கைகள் அனுப்பி வருகின்றனர். கூட்டுறவு சட்டம் 81 பிரிவின் கீழ், விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் விசாரணை துவங்கும்,'' என்றார்.
மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவமலர் கூறுகையில், ''இந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான ஆறு மாதங்களில், பவன்குமார் முறைகேடு செய்துள்ளார். அவரின் சொத்துக்களை முடக்கிவிட்டோம். அவரிடம் இருந்து வர வேண்டிய, 60 லட்ச ரூபாயை வசூலித்து விடுவோம். சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க, போலீசாரிடமும் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

