காஞ்சிபுரம் - ராஜகுளம் நான்கு வழிச்சாலை விரிவுபடுத்த ரூ.10 கோடி! நிதி கேட்டு அரசுக்கு நெடுஞ்சாலை துறையினர் பரிந்துரை
காஞ்சிபுரம் - ராஜகுளம் நான்கு வழிச்சாலை விரிவுபடுத்த ரூ.10 கோடி! நிதி கேட்டு அரசுக்கு நெடுஞ்சாலை துறையினர் பரிந்துரை
UPDATED : ஆக 02, 2026 10:06 PM
ADDED : ஆக 02, 2026 08:43 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர் கிராமம் வழியாக, ராஜகுளம் வரையில் 9 கி.மீ., நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்த 10 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை திட்ட அறிக்கை அளித்துள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்தினால், 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய உதவிக்கோட்டங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், காஞ்சிபுரம் குஜராத்தி சத்திரம் பகுதியில் இயங்கும் நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், 1,122 கி.மீ., துார சாலைகள் மட்டுமே உள்ளன.
கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளில், வாகன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய பாலம் கட்டும் பணிகளை, நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.
தவிர, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 596 கி.மீ., கிராமப்புற சாலைகள் மற்றும், 400 கி.மீ., வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 996 கி.மீ., துாரம் சாலைகள் உள்ளன.
நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளை, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
முதல்வர் சாலைகள் விரிவாக்க திட்டம், பிரதமர் சாலைகள் மேம்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக, ஊரகத்தில் இருக்கும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும், சில சாலைகளை வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, சாலைகள் விரிவுபடுத்துவது மற்றும் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
உதாரணமாக, காஞ்சிபுரம் சாலை, ஓரிக்கை, வந்தவாசி, செவிலிமேடு, காஞ்சிபுரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் விரிவுபடுத்த முடியாத நிலை மற்றும் புதுப்பிக்கப்படாத நிலை உள்ளது.
இதில், செவிலிமேடு - வெங்குடி புறவழிச்சாலை போடுவதற்கு, சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் எனும் 'கும்டா'வின் அறிவுத்தலின்படி, ், திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் முதல், ராஜகுளம் வரையில், 9 கி.மீ., துாரம் சாலையை, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையை விரிவுபடுத்த, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் முதல், வையாவூர் வரையில் 2 கி.மீ., துாரம் வரையில் விரிவுபடுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 7 மீ., சாலை அகலத்தில் இருந்து, 10.50 மீட்டராக, 2 கி.மீ., துார சாலை விரிவுபடுத்தவும் உள்ளன. இதில், நான்கு இடங்களில் கல்வெட்டு, சாலையோரம் மழைநீர் வடிகால் என, 10 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரித்து அனுப்பி உள்ளனர்.
இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் சாலை விரிவுபடுத்தப்படும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
இதன் மூலமாக, காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர், ஒழையூர், மோட்டூர், நல்லுார், கரூர், ராஜகுளம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட கிராமத்தினர் புறவழி சாலை வழியாக எளிதாக செல்ல முடியும் என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர் வழியாக ராஜகுளம் வரையில், 9 கி.மீ., துார இரு வழி சாலையை, 7 மீ., சாலை அகலத்தில் இருந்து, 10.50 மீட்டராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு, திட்டம் தயாரித்து, 10 கோடி ரூபாய் நிதி கேட்டு ஒப்புதல் பெற உள்ளோம்.
ஒப்புதல் கிடைத்தவுடன் படிப்படியாக சாலை விரிவுபடுத்த உள்ளோம். அரசியல் தலைவர்கள் வருகை, திருவிழாக்கள் உள்ளிட்ட நேரங்களில் புற வழிச்சாலையில் நெரிசலை குறைக்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
