/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.11 கோடி பணிகள்: அமைச்சர் அடிக்கல்
/
ரூ.11 கோடி பணிகள்: அமைச்சர் அடிக்கல்
ADDED : பிப் 16, 2024 10:38 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தின் உட்பட்ட பகுதிகளில், 11.39 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் நடைபெற உள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று மாலை ஸ்ரீபெரும்புதுார் பழைய சார் - பதிவாளர் வளாகத்தில் நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார். இதில், பதிவுத்துறை அறிவிப்பு 2022 - 2023ன் கீழ், 1.85 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகம், பள்ளிக்கல்வித் துறை நபார்டு திட்டத்தின் கீழ், பெரியார் நகர் நந்தம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் என, மொத்தம் 11.39 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அதேபோல், மாநில நிதிக்குழு மானிய 2022- - 23 திட்டத்தின் கீழ், 18.79 லட்சம் ரூபாய் மதிப்பில் எடையார்பாக்கம் ஊராட்சி தொடக்கப் பள்ளி கட்டடமும், கீவளூர், தண்டலம், தத்தனுாரில் அங்கன்வாடி மையம், பால்நல்லுார், சந்தவேலுார், சித்துாரில் சமையற் கூடங்களும், கீளாய், கீவளூர் ஊராட்சி அலுவலகக் கட்டம் உட்பட, மொத்தம் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் சிவசண்முக சுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.