/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீட்டணஞ்சேரியில் எள் சாகுபடி அமோகம்
/
சீட்டணஞ்சேரியில் எள் சாகுபடி அமோகம்
ADDED : ஏப் 15, 2025 01:07 AM

சாத்தணஞ்சேரி, உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, களியப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் பாலாற்றங்கரையொட்டி உள்ளன. இப்பகுதிகளில் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் ஒருபுறம் சாகுபடி செய்தாலும், எள், உளுந்து போன்ற மானாவாரி சாகுபடி விவசாயத்திலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில், நவரைப் பருவத்திற்கு நெல், வேர்க்கடலை போன்றவை நடவு செய்த அதே சமயத்தில், எள் பயிரும் குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பில் சாகுபடி செய்துள்ளனர்.
அப்பயிர்கள் நல்ல விளைச்சல் தந்து அடுத்த சில தினங்களில் அறுவடை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, சீட்டணஞ்சேரி கிராம விவசாயிகள் கூறியதாவது:
எள் சாகுபடியை பொருத்தவரை, எள் விதைகள் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் இருந்தால் போதுமானது. அதன்பின் அதிக மழைப்பொழிவு தேவை இல்லை. லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் அதிக மகசூல் கொடுக்கும் பயிர் வகை என்பதால் கோடை சாகுபடியாக எள்ளை விரும்பி சாகுபடி செய்கிறோம்.
நாங்கள் உற்பத்தி செய்யும் எள்ளை, எங்களது பயன்பாட்டிற்கு போக, இப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேரில் வந்து விலை கொடுத்து வாங்கி சென்று விடுகின்றனர்.
இதனால், வெளி சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதில்லை. கடந்த ஆண்டு ஒரு கிலோ எள் 110 ரூபாய் வரை விலை போனது.
இந்த ஆண்டுக்கு அறுவடைக்கு பின்தான் விலை குறித்து தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.