/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'அம்ருத்' திட்ட பணிகளுக்கு பல துறை அதிகாரிகள்...முட்டுக்கட்டை:ஒத்துழைப்பு இல்லை என ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
/
'அம்ருத்' திட்ட பணிகளுக்கு பல துறை அதிகாரிகள்...முட்டுக்கட்டை:ஒத்துழைப்பு இல்லை என ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
'அம்ருத்' திட்ட பணிகளுக்கு பல துறை அதிகாரிகள்...முட்டுக்கட்டை:ஒத்துழைப்பு இல்லை என ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
'அம்ருத்' திட்ட பணிகளுக்கு பல துறை அதிகாரிகள்...முட்டுக்கட்டை:ஒத்துழைப்பு இல்லை என ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
ADDED : ஜூன் 27, 2025 11:21 PM

காஞ்சிபுரம்: மத்திய அரசின், 'அம்ருத்' திட்ட பணிகள் செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், பணி தாமதமாவதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் இடையே புலம்பல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், குன்றத்துார், மாங்காடு ஆகிய நகராட்சிகள்; வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகள் என, நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.
அனுமதி
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான, 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 2021 - 22ம் ஆண்டு முதல், 2025 - 26 வரை, குடிநீர் வழங்குதல், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்துதல் மற்றும் நகர்ப்புற இடங்களில், பசுமையான பூங்காக்கள் அமைக்கும் பணிகளை செய்யலாம் என, அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகளில், 74.82 லட்சம் ரூபாய் செலவில், பூங்காக்கள் கட்டுமான பணிகள், இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு பெற்றுள்ளன.
வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, நான்கு தண்ணீர் உறிஞ்சும் கிணறுகள், இரண்டு நீரேற்றும் நிலையம், இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 12 கி.மீ., பிரதான பைப் லைன், 80 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் வினியோக பைப் லைன் அமைக்க திட்டமிட்டு உள்ளனர்.
இப்பணிகளுக்காக, 20.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாலாற்றில் இருந்து, நான்கு உறிஞ்சு கிணறுகள், ஒரு நீரேற்றும் நிலையம், ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2.25 கி.மீ., பிரதான பைப் லைன், 47.76 கி.மீ., குடிநீர் விநியோக பைப் லைன் போடப்பட உள்ளன. இதற்கு, 14.79 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவகாசம்
இந்த குடிநீர் பணிகளுக்கு, 2023ம் ஆண்டு 'டெண்டர்' விடப்பட்டது. இந்த பணிகளை, 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், குடிநீர் வளர்ச்சி பணிகள் இன்னும் முடியவில்லை.
துறை சார்ந்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திற்கு பின், 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தாமதம்
எனினும், இந்த வளர்ச்சி பணிகளுக்கு, நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. மேலும், நிதி விடுவிப்பில் தாதம் ஏற்படுவதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் இடையே, புலம்பல் ஏற்பட்டுள்ளது.
அம்ருத் திட்ட பணி செய்யும் ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது:
அம்ருத் திட்டத்தில் செய்து வரும் பணிகளுக்கு, அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், பணிகள் விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
குறிப்பாக, சாலை ஓரங்களில் பைப் லைன் புதைத்து, குடிநீர் எடுத்து செல்ல, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. சில இடங்களில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதை சரி செய்ய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
மேலும், முடிவுற்ற பணிகளுக்கு பணம் விடுவிப்பதில், அந்தந்த துறைகளில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பணிகள் முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில், புதிய குடிநீர் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், நீரேற்றும் நிலையம் மற்றும் குடிநீர் பைப் லைன் புதைப்பது என, பல்வேறு பணிகளை தனித்தனியாக பிரித்து செய்ய வேண்டும்.
டெண்டர் எடுத்தவர், பல்வேறு பணிகளை ஒருவரே செய்வதால் தான் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், எங்கள் துறை சார்பாக முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். பணம் விடுவிப்பு குறித்து, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.