/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு...முற்றுப்புள்ளி! சீரமைக்க ரூ.28 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
/
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு...முற்றுப்புள்ளி! சீரமைக்க ரூ.28 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு...முற்றுப்புள்ளி! சீரமைக்க ரூ.28 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு...முற்றுப்புள்ளி! சீரமைக்க ரூ.28 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
ADDED : ஆக 07, 2024 02:42 AM

காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதும், குப்பை கொட்டுவதும் தொடர்கதையான நிலையில், தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்திய காரணத்தால், ஏரியை முழுமையாக சீரமைக்க, 28 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து, நீர்வள ஆதாரத்துறை, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் நத்தப்பேட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி வாயிலாக, 550 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டு முழுதும் இந்த ஏரியில் தண்ணீர் இருப்பதால், இங்கு வளரும் மீன்களை பிடித்து மீனவர்கள் பலரும் விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
வேடந்தாங்கல் போல, கூழைக்கடா, வெள்ளை சிறிய நாரை உள்ளிட்ட பல பறவைகள் இங்கு ஆண்டு முழுதும் முகாமிடுவதால், பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் முழுதும், சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஏரியில் கலக்கிறது.
இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் பழுதாகி பல ஆண்டுகள் ஆனதால், மாநகராட்சியில் சேகரமாகும் கழிவுநீர் முழுதும் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் நேரடியாக ஏரியில் கலக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், மஞ்சள்நீர் கால்வாய் வாயிலாகவும் ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. ஏரியின் ஒரு பகுதியில், மாநகராட்சி குப்பை மலை போல குவிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏரியின் நில அமைப்பே மாறிவிட்டது.
விவசாயிகள் இதுபற்றி பலமுறை கலெக்டரிடமும், மாநகராட்சி நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை ஆகியோரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயிகளும், சுற்றிஉள்ள வையாவூர், களியனுார் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாவதாக பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புலம்பியும் பலன் இல்லை.
அதிகாரிகள் புலம்பல்
இந்நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது. நத்தப்பேட்டை ஏரியை சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறைக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இதன் அடிப்படையில், நத்தப்பேட்டை ஏரியை சீரமைக்க 28 கோடி ரூபாய் தேவை என, மதிப்பீடு செய்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை, தமிழக அரசுக்கு கருத்துரு ஒன்றை அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்கவும், கால்வாய்களை மீட்டெடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு கிடைப்பதில்லை என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், நத்தப்பேட்டை ஏரியை சீரமைக்க, 28 கோடி ரூபாயை தமிழக அரசு கொடுத்தால் மட்டுமே சீரமைக்க முடியும் என நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்தால், 'ஏரி முழுதும் துார் வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, கலங்கள், மதகு போன்றவை சரி செய்யப்படும்' என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'பசுமை தீர்ப்பாய உத்தரவை தொடர்ந்து, நத்தப்பேட்டை ஏரியை சீரமைக்க தேவையான, 28 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு கருத்து சமர்ப்பித்து உள்ளோம்.
'நிதி ஒதுக்கிய உடன் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், துார்வாரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மாநகராட்சிக்கு அபராதம்
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கழிவுநீர் நத்தப்பேட்டை ஏரியில் கலப்பது தொடர்பாக, 2021ல், 95 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அங்கு குப்பை கொட்டுவது தொடர்பாக 38 லட்ச ரூபாய் என, மொத்தம் 1.33 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். இந்த அபராதத்தை அவர்கள் எங்களுக்கு செலுத்தவில்லை.
அதேபோல, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவது தொடர்பான விபரங்கள் கூட எங்களுக்கு முழுமையான அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
நத்தப்பேட்டை ஏரியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்கிறோம். நாங்கள் எடுத்த நடவடிக்கையை பசுமை தீர்ப்பாயத்துக்கு தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.