தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மருத்துவமனை மேம்பட்டும் வசதிகளின்றி நோயாளிகள் திண்டாட்டம்! சிசேரியன் கூட கிடையாது; 105ல் 73 'பெட்'கள் முடக்கம்

மருத்துவமனை மேம்பட்டும் வசதிகளின்றி நோயாளிகள் திண்டாட்டம்! சிசேரியன் கூட கிடையாது; 105ல் 73 'பெட்'கள் முடக்கம்

மருத்துவமனை மேம்பட்டும் வசதிகளின்றி நோயாளிகள் திண்டாட்டம்! சிசேரியன் கூட கிடையாது; 105ல் 73 'பெட்'கள் முடக்கம்


UPDATED : ஆக 27, 2026 08:55 AM

ADDED : ஆக 26, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 08:55 AM ADDED : ஆக 26, 2026 07:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார அரசு பொது மருத்துவமனையை, 10 கோடி ரூபாயில் நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தியும், கர்ப்பிணியருக்கு சிசேரியன் வசதி மற்றும் அவசர கால சிகிச்சை வசதிகள் இல்லை. மொத்தம், 105 படுக்கை வசதிகள் இருந்தும், 32 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன; மற்றவை முடக்கப்பட்டுள்ளன. இதனால், 30 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு, நோயாளிகள் அலைந்து திரியும் அவலம் தொடர்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில், 40,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வட்டார அரசு பொது மருத்துவமனையில், அப்பகுதியை சுற்றி உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என, நுாற்றுக்கணக்கானோர் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர்.

இம்மருத்துவமனையில், 20 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 4 பேர் மட்டுமே உள்ளனர். 24 நர்ஸ்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 6 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு மயக்க மருந்து நிபுணர், இதய மருத்துவர், கண் மருத்துவர் இல்லை.

இம்மருத்துவமனையில், உயர் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில், அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது.

அம்மாதிரியான சமயங்களில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தனர்.

சிகிச்சைக்கான கால தாமதம் உள்ளிட்ட காரணங்களால், சில சமயங்களில் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டன.

இப்பிரச்னையை போக்க, உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என, பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று, 2022ல் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், 'உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனை நவீனமயமாக தரம் உயர்த்தப்படும்' என, அரசு அறிவித்தது.

இதற்காக உலக வங்கி திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 13,000 சதுர அடியில் நவீனமயமான மருத்துவமனைக்கான கட்டும் பணி, 2023ல் தொடங்கியது.

மேம்படுத்தப்பட்ட இம்மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, தாய் - சேய் நல மருத்துவமனை, ஐ.சி.யு., உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான கட்டட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

மொத்தம், 10 கோடி ரூபாயில் நவீனமயமாக்கும் பணிகள் முடிந்து, 2025., செப்., மாதம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய கட்டட மருத்துவமனையில், கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டும் மருத்துவ சிகிச்சை மேம்படவில்லை. போதிய உபகரணங்களும் இல்லை என, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், அனைத்து வகை சிகிச்சை பிரிவுகளும் செயல்பாட்டில் உள்ளன. கர்ப்பிணியர்க்கு சிசேரியன் செய்வதில் மயக்க மருந்து நிபுணர், ரத்த வங்கி சேவை போன்ற கூடுதல் வசதி மற்றும் சிக்கலான பிரசவங்களின் பாதுகாப்பு கருதி, செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இயல்பான பிரசவங்கள் தொடர்ந்து, இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்கேன், எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ போன்ற மருத்துவ உபகரணங்கள் செயல்பாட்டில் உள்ளன. விபத்து உள்ளிட்ட அவசர கிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது.

மிகவும் கடினமான சூழலில் நோயாளி உயிர் காக்கும் நோக்கில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பது வழக்கம்.

மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடம் காலியாக உள்ளதால், சில சிரமங்கள் உள்ளன. சுகாதாரத்துறை சார்பில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விரைவில் அறுவை உள்ளிட்ட அனைத்து வகை சிகிச்சை முறைகள் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'நவீனமயமாக்கப்பட்ட மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப்ப பிரிவு இன்னும் துவங்கப்பட வில்லை. அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களும் வாங்கப்படவில்லை. விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவும் முறையாக செயல்படாததால், முன்பை போலவே ஆபத்து கால சிகிச்சைக்கு, 30 கி.மீ., துாரமுள்ள செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கால நேர தாமதத்தால் உயிர் இழப்புகள் சம்பவம் தொடர்கின்றன. எந்த நோக்கத்திற்காக 10 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை மேம்படுத்தப்பட்தோ அந்த வகையான நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. - உமாமகேஸ்வரி. கம்மாளம்பூண்டி.


மருத்துவமனையை தரம் உயர்த்தியும், உயர் சிகிச்சை வசதி இல்லாமல் உள்ளது. நாளொன்றுக்கு 500 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு, 105 படுக்கை வசதிகள் இருந்தும், 32 படுக்கை வசதி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இருந்தும் போதிய மருத்துவர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற அவசரகால சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது இல்லை. இதனால், நோயாளிகள் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இம்மருத்துவமனையில் சிகிச்சைக்கான போதிய வசிதிகள் ஏற்படுத்தி முறையாக செயல்படுத்த சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜெயராமன். காவாம்பயிர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us