மாணவ – மாணவியருக்கு வரும் 27ல் திருமுறை பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டி
மாணவ – மாணவியருக்கு வரும் 27ல் திருமுறை பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டி
UPDATED : நவ 24, 2026 04:04 PM
ADDED : நவ 24, 2026 04:04 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சைவ சபை சார்பில், பள்ளி கல்லுாரி மாணவ – மாணவியருக்கு, வரும் 27ம் தேதி திருமுறைப் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற உள்ளன.
காஞ்சி சைவ சபை சார்பில், நான்காவது ஆண்டாக பள்ளி கல்லுாரி மாணவ – மாணவியருக்கான 63 நாயன்மார்கள் பற்றிய பேச்சு போட்டி மற்றும் தேவாரம், திருவாசகம், திருமுறைப் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள், வரும் 27ம் தேதி காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர் வரை பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்போர் பேச்சு போட்டியில், ஏதேனும் ஒரு நாயன்மாரைப் பற்றி பெரிய புராணப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ஐந்து நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.
தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில், அந்தந்த திருமுறைப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே 3,000, 2,000, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளன.
மேலும், 20 பேருக்கு ஆறுதல் பரிசாக 750 ரூபாய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் உள்ளூர் மாணவ – மாணவியருக்கு போக்குவரத்து செலவுக்காக 50 ரூபாயும், வெளியூர் மாணவ – மாணவியருக்கு 150 ரூபாயும், மதிய உணவும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர் 99411 20979 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ,என, காஞ்சி சைவ சபை அமைப்பாளர்கள் டாக்டர் சுப்பிரமணியம், சிவகாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
