/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மந்தகதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் அவதி
/
மந்தகதியில் சாலை பணி வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 04, 2025 01:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:போந்துார் --ஆரநேரி சாலையில், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக மந்த கதியில் நடந்து வரும் பணியால், அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் போந்துார் கிராமத்தில் இருந்து, ஆரநேரி செல்லும் இணைப்பு சாலை 1.4 கி.மீ., உள்ளது. போந்துார் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கும் பணி மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது.
இதையடுத்து, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு ஒரு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், மந்த கதியில் நடந்து வரும் சாலை பணியால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் மற்றும் வயதானோர், ஜல்லி கற்கள் மீது செல்லும் மீது இடறி விழுந்து விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். இதனால், சாலை பணிகள் விரைந்து முடிக்க, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.