/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடையம்புதுார் சமூக காட்டில் தொடரும் மண் கடத்தல்
/
இடையம்புதுார் சமூக காட்டில் தொடரும் மண் கடத்தல்
ADDED : அக் 29, 2025 11:36 PM

உத்திரமேரூர்: இடையம்புதுார் சமூக காட்டில் தொடர்ந்து மண் கடத்தல் நடந்து வருகிறது.
உத்திரமேரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட இடையம்புதுார் கிராமத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் சமூக காடு உள்ளது.
ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், 20 ஆண்டுக்கு முன், வனத்துறையினர் நாவல், இலுப்பை, நீர்மருது உள்ளிட்ட மரங்களை நட்டு, சமூகக் காட்டை உருவாக்கி பராமரித்து வருகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை, சமூக காட்டில் மேய்ச்சலுக்கு கட்டி வருகின்றனர்.
தற்போது, இடையம்புதுார் சமூக காட்டில் சட்டவிரோதமாக சமீப நாட்களாக மண் கடத்தல் நடந்து வருகின்றன.
குறிப்பாக, ரெட்டமங்கலம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள, சமூக காட்டில் மண் தோண்டி கடத்தப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இடையம்புதுார் சமூக காட்டில் நடக்கும் மண் கடத்தல் சம்பவங்களை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இடையம்புதுார் சமூக காட்டில் மண் அள்ளுவதற்கு அனுமதி இல்லை. மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

