/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் பிரச்னைக்கு தீர்வு கூடுதல் கிடங்குகளில் நெல் சேமிக்க நடவடிக்கை
/
கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் பிரச்னைக்கு தீர்வு கூடுதல் கிடங்குகளில் நெல் சேமிக்க நடவடிக்கை
கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் பிரச்னைக்கு தீர்வு கூடுதல் கிடங்குகளில் நெல் சேமிக்க நடவடிக்கை
கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் பிரச்னைக்கு தீர்வு கூடுதல் கிடங்குகளில் நெல் சேமிக்க நடவடிக்கை
ADDED : ஏப் 26, 2025 01:13 AM

வாலாஜாபாத்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களுக்கும், ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக நெல் பயிரிடுவதை விவசாயிகள் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர்.
கடந்த பருவ மழையை தொடர்ந்து, நவரை பட்டத்திற்கு ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அதிக அளவிலான நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். அப்பயிர்கள் வளர்ந்து சில நாட்களாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் செயல்படுத்தப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர்.
இதற்காக நெல் விளைச்சல் உள்ள பகுதிகளில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் வாங்கும் நெல்லை வாணிப கழத்திற்கான கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு லாரிகள் வாயிலாக ஏற்றிச் செல்லாமல் தாமதப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில், இத்தகைய பிரச்னை நிலவுகிறது. இதனால், அறுவடை செய்து நெல் கொண்டு வரும் அடுத்த விவசாயிகளிடம் இருந்து புதிய நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால், திடீரென கோடை மழை பெய்தால், கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் நனைந்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு குவித்து வைத்துள்ள விவசாயிகளின் நெல்லும் சேதமாகும் நிலை உள்ளது.
எனவே, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடையாமல் உடனுக்குடன் ஏற்றி செல்வதற்கான நடவடிக்கை தேவை என விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நெல் கொள்முதல் நிலைய அலுவலர் ஒருவர் கூறியதாவது,
லாரிகள் தட்டுப்பாடு மற்றும் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் அதிகளவு நெல் குவிந்ததன் காரணத்தால், சில நிலையங்களில் நெல் மூட்டைகள் உடனுக்குடன் எடுப்பதில் சிக்கல் இருந்தது. தற்போது லாரிகள் தட்டுப்பாடு பிரச்சினை ஓரளவு தீர்ந்துள்ளது.
நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டவாக்கம், வேடபாளையம் ஆகிய சேமிப்பு கிடங்குகளோடு, தற்போது வேறு சில பகுதிகளிலும் கூடுதல் நெல் சேமிப்பு கிடங்குகள் துவங்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்தடுத்த நாட்களில் கொள்முதல் நிலையங்களில் அதிகளவிலான நெல் மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, நெல் தேக்கம் முற்றிலும் குறைந்து விடும்,
இவ்வாறு அவர் கூறினார்.

