/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
6.6 செ.மீ., மழைக்கே காஞ்சியில் சில பகுதிகள்... தத்தளிப்பு: 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
/
6.6 செ.மீ., மழைக்கே காஞ்சியில் சில பகுதிகள்... தத்தளிப்பு: 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
6.6 செ.மீ., மழைக்கே காஞ்சியில் சில பகுதிகள்... தத்தளிப்பு: 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
6.6 செ.மீ., மழைக்கே காஞ்சியில் சில பகுதிகள்... தத்தளிப்பு: 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
UPDATED : செப் 20, 2025 03:26 AM
ADDED : செப் 19, 2025 10:47 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த 6.6 செ.மீ., மழைக்கே, ரெட்டிப்பேட்டை, திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மஞ்சள்நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய மழைநீர், சாலையில் வெள்ளம் போல ஓடியதால், நகர மக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்தது. மாலை 6:00 மணிக்கு லேசாக துவங்கிய மழை, இரவு 10:00 மணி வரை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் நகரில் 6.6 செ.மீ., மழை பதிவானது.
![]() |
கனமழை காரணமாக, காஞ்சிபுரம் நகரில் அனைத்து பகுதி மழைநீர் கால்வாய்களும் நிரம்பின.
இதனால், காஞ்சிபுரம் ரயில்வே சாலை, ரங்கசாமிகுளம், பேருந்து நிலையத்தை சுற்றிய பகுதிகள் என, நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
வெள்ளப்பெருக்கு குறிப்பாக, பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, வள்ளல் பச்சையப்பன் சாலை வழியாக ஓடும் மஞ்சள்நீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கால்வாயில் வெளியேறிய அதிகப்படியான மழைநீர், ரெட்டிப்பேட்டை, திருக்காலிமேடு, மார்க்கெட்டை சுற்றிய பகுதிகளில், உள்ள வீடுகளை சூழ்ந்தது. 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், வீட்டு உபயோக பொருட்கள் நாசமாகின.
இரவில் துாங்க இடமில்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு பலரும் தவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வீட்டிலிருந்து வெளியேற்ற பல மணி நேரம் சிரமப்பட்டனர்.
![]() |
அதேபோல், ரயில்வே சாலையில் இருந்து திருக்காலிமேடு வரையிலான சாலையில் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், வாகனங்களில செல்ல முடியாமல் நள்ளிரவு வரை வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
மின் மோட்டார், பொக்லைன் இயந்திரம் மூலமாக, மழைநீரை அகற்றவும், அடைப்புகளை நீக்கவும் முயன்றனர். இதனால், நள்ளிரவில் மழைநீர் மெல்ல வடிந்த பின், நேற்று காலை அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.
மஞ்சள்நீர் கால்வாயில் ஒப்பந்த நிறுவனம் செய்த பணிகளால் ஏற்பட்ட மணல் குவியலை அகற்றாதது, ரெட்டிப்பேட்டை பாலத்திற்கும், மஞ்சள்நீர் கால்வாய்க்கும் இடையே சுவர் கட்டாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களாலேயே, வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பின், மஞ்சள்நீர் கால்வாயில் சேர்ந்துள்ள மணல், கழிவுகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
கவலை காஞ்சிபுரத்தில், 6.6 செ.மீ., மழை பெய்ததற்கே, நகரில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நவ., - டிசம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தால், கடுமையான சேதம் ஏற்படும் என, ரெட்டிப்பேட்டை, திருக்காலிமே டு, மின் நகர் உள்ளிட்ட பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மஞ்சள்நீர் கால்வாயில், 1.5 கி.மீ., துாரத்தில் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
'அதில், திருக்காலிமேடு பகுதியில், 350 மீட்டர் தான் மேற்கொள்ள வேண்டும். விரைவாக அந்த பணிகளும் முடிக்கப்படும். அது முடிந்தால், கனமழை பெய்தாலும், ரெட்டிப்பேட்டை மற்றும் அதை சுற்றிய பகுதிகளுக்கு பாதிப்பு இருக்காது' என்றார்.
கால்வாய் அகலத்தை
குறைத்ததால் பிரச்னை
காஞ்சிபுரம் நகரில் மழைநீர் செல்வதற்காக, மன்னர் காலத்தில் மஞ்சள்நீர் கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய், புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, வள்ளல் பச்சையப்பன் தெரு, ரெட்டிப்பேட்டை, திருக்காலிமேடு வழியாக, நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. இந்த கால்வாயின் இருபக்க சுவர்களை, புதிதாக கட்டும் பணி, 40 கோடி ரூபாயில் நடக்கிறது. ரெட்டிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், கால்வாயின் அகலத்தை குறைத்து, கால்வாய் கட்டப்படுகிறது. இதனால், மழைநீர் அதிகமாக வரும்போது, கால்வாயில் செல்ல முடியாமல், சாலையில் வழிந்தோடும் நிலை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கால்வாயை குறை த்து கட்டியது, மழைக்காலத்தில் பிரச்னையை ஏற்படுத்துவதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.