/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மெட்ரோவில் பெண் பயணியருக்காக பிரத்யேக பாதுகாப்பு குழு துவக்கம்
/
மெட்ரோவில் பெண் பயணியருக்காக பிரத்யேக பாதுகாப்பு குழு துவக்கம்
மெட்ரோவில் பெண் பயணியருக்காக பிரத்யேக பாதுகாப்பு குழு துவக்கம்
மெட்ரோவில் பெண் பயணியருக்காக பிரத்யேக பாதுகாப்பு குழு துவக்கம்
ADDED : பிப் 15, 2024 10:03 PM

சென்னை:சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரம் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில், தினமும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்.
பெண் பயணியரை அதிகரிக்கும் வகையில், அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதியை, மெட்ரோ ரயில் நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், 23 பேர் உடைய 'தி பிங்க் ஸ்குவாட்' எனும் பெண்கள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது.
நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்பு குழுவை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக் அறிமுகப்படுத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:
மெட்ரோ ரயில் பயண மேம்பாடு குறித்து, பயணியரிடம் கருத்துகளை கேட்டறிந்தோம். அதில், பெண் பயணியர் கூடுதல் பாதுகாப்பு எதிர்பார்ப்பது தெரிந்தது. இதையடுத்து, பெண்கள் பாதுகாப்பு குழு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தற்காப்புக்கலை தவிர, வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றவர்கள்.
நெரிசல் மிகுந்த நேரங்களில், மெட்ரோ ரயில் நிலையம், ரயில்களில் பெண்களுக்கு எதிரான ஏதாவது குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருந்தால், இவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பர்.
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 1860 425 1515 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டால், ரோந்து பணியில் ஈடுபடும் இந்த பெண்கள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள், சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பர்.
இவர்கள், காவல் துறையைச் சார்ந்தவர்கள் அல்ல. அதே நேரத்தில், வழக்கமான பாதுகாவலர்களுக்கான அதிகாரமுடைய இவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
சென்ட்ரல், ஆலந்துார் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில், பணியில் அமர்த்தப்படுவர். விரைவில், அடுத்தடுத்த நிலையங்களில், இக்குழுவினர் பணியில் ஈடுபடுவர்.
பெண் பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.