நெற்பயிரில் சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
நெற்பயிரில் சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
UPDATED : ஜூலை 28, 2026 03:36 PM
ADDED : ஜூலை 28, 2026 02:10 PM
நெற்பயிரில், நுண் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
நெல் பயிர் சாகுபடி செய்யும் போது, இளம் பயிர், கதிர் வரும் நெற்பயிர் என, பல்வேறு நிலைகளில் இருக்கும் இலைகளில் நுண் சிலந்தி தாக்குதல் ஏற்படுத்தும்.
இது, நெற்பயிரின் இலைக்கு அடி பகுதிகளில், கண்ணுக்கு தெரியாத அளவிற்கு சிறிளவில் வெண் புள்ளிகளாக தோண்றி, இலையின் நுனி பகுதி மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். சில நேரங்களில் இலைகள் சுருண்டு காய்ந்துவிடும். இதனால், நெற்பயிர் பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
இதை தவிர்க்க, வயலில் தண்ணீர் பற்றாக்குறை இன்றி நீர் பாசனம் செய்து விட வேண்டும். அதிகமாக நைட்ரஜன் உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். களைகளை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்க்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில், 30 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய், ஐந்து மில்லி லிட்டர் திரவ சோப்பு கலந்து கரைசலை தெளிக்க வேண்டும். மேலும், வேப்பங்கொட்டை கரைசலையும் இயற்கை உரங்களாக தெளிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் புரோபர்கைட் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி லிட்டர் பெனசாக் ரசாயன உரம் கலந்து இலைகளுக்கு அடியில் தெளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது, இலைக்கு அடியில் இருக்கும் நுண் இலை சிலந்தியை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
-- செ.சுதாஷா,
97910 15355.
