73 கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பணியாளர்கள் பிடிவாதம்:அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து நாசமாகுது நெல்
73 கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பணியாளர்கள் பிடிவாதம்:அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து நாசமாகுது நெல்
UPDATED : செப் 19, 2026 09:01 PM
ADDED : செப் 19, 2026 08:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 73 கொள்முதல் நிலையங்கள் திறந்தும், கொள்முதல் செய்வதற்கு மூட்டைக்கு 65 ரூபாய் கேட்டு பணியாளர்கள் பிடிவாதம் செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதை கண்டுகொள்ளாமல், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், ஆங்காங்கே கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் முளைத்தும், நிறம் மாறியும் நாசமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சொர்ணவாரி பருவம்
சொர்ணவாரி பருவத்திற்கும், சம்பா பருவத்திற்கும் இடைப்பட்ட குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், 35 ஆயிரம் டன் நெல் மற்றும் சம்பா, நவரை ஆகிய இரு பருவங்களில் சாகுபடி செய்த நெல்லை, பிப்., முதல் ஜூன் மாதம் வரையில், 1.20 லட்சம் டன் நெல் மிகையாகாமல், நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த சம்பா, நவரை பருவத்தில் மட்டும், 1.35 லட்சம் டன் நெல்லை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் சாகுபடி செய்த நெல்லை, ஒரு மாதமாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு, விவசாயிகள் குவியலாக கொட்டி வைத்துள்ளனர்.
இந்த நெல் கொள்முதல் செய்வதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 73 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார்.
மேல்பேரணமநல்லுார் உள்ளிட்ட சில நெல் கொள்முதல் நிலையங்களை, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா திறந்து வைத்துள்ளார்.
இருப்பினும், நெல் கொள்முதல் செய்யும் பணியை, நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பருவ கால பணியாளர்கள் முறையாக செய்யாமல் அடம் பிடிப்பதாக கூறப்படுகிறது.
ஒரு சில நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை இறக்குவதற்கு பணம் வழங்காததால், லாரிகளின் நகர்வு இல்லை என, லாரி உரிமைாளர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், நாட்கணக்கில் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், நெல் முளைக்கும் அவலமும், நிறம் மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், சம்பா பருவத்திற்கு நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும் என, விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
ரயிலில் நெல் லோடு வந்ததால், நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முடியுவில்லை. விரைவில், ரயில் நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு, நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி இருக்கும் நெல் மூட்டைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து, நெல் மூட்டை சேமிக்கும் கிடங்கிற்கு எடுத்து செல்லும் போது, ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுத்தால் தான் இறக்குவேன். இல்லை எனில், இறக்க முடியாது என, மறுப்பு தெரிவிக்கின்றனர். ஒரு லாரி நான்கு நாட்களாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. _ தியாகராஜன், லாரி உரிமையாளர், காஞ்சிபுரம்.
ஒரு நெல் மூட்டைக்கு 65 ரூபாய் நெல் கொள்முதல் நிலையம் நடத்துவோரின் மூலமாக, பருவ கால பணியாளர்கள் பெற்று வந்தனர். அதை நெல் துாற்றுவதற்கும், நெல் மூட்டை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் என, பங்கு பிரித்து நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், நெல் மூட்டைக்கு பணம் வசூலிக்கக்கூடாது என, அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். நெல் துாற்றுவதற்கும், லாரிகளில் ஏற்றி, இறக்குவதற்கும் கூலி ஆட்களுக்கு பணம் வழங்க வேண்டும். பணியாளர்கள் கை காசு போட்டு நெல் கொள்முதல் செய்ய முடியாது. ஆகையால், நெல் கொள்முதல் செய்வதை தாமதப்படுத்துகின்றனர். நெல் கொள்முதல் செய்யாததால், குவியலாக கொட்டிய நெல் குவியலில், மூன்று அங்குலத்திற்கு நெல் முளைப்பு ஏற்பட்டுள்ளது. தார்ப்பாய்க்குள்ளே இருக்கும் நெல்லின் நிறம் மாறும் சூழல் உள்ளது. தனியார் நெல் கொள்முதல் செய்வதை போல், நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஏன் எங்களின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. - ரவிச்சந்திரன், விவசாயி, அரும்புலியூர், உத்திரமேரூர்.
